தோழர் சேகுவேரா சினிமா விமர்சனம்

கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமை‘ என்பதை அழுத்தந் திருத்தமாகவும் அடிதடியோடும் சொல்கிற படம்.

‘கீழ் சாதிக்காரர்கள் படித்து முன்னேறிவிட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள், நம்மிடம் அடிமையாக வேலை செய்ய மாட்டார்கள்’ என்பதை மனதில் வைத்து, அவர்களைப் படிக்கவிடாமல் தடுக்க, மேல்சாதிக்காரர்கள் இந்த மண்ணில் அரங்கேற்றிய அநியாய அக்கிரமங்கள் ஏராளம். அந்த அநியாய அக்கிரமங்கள் இன்று வரை முடிவுக்கு வரவில்லை என்பதை வலியுடன் பதிவு செய்திருக்கிற ‘தோழர் சேகுவேரா.’

அந்த ஊரில் சாதியில் தாழ்ந்த வீட்டுப் பிள்ளைகள் படிப்பதைத் தடுக்க அதிகார பலமும் பணபலமும் கொண்ட மேல் சாதிக்காரர்கள் பல விதங்களிலும் முட்டுக்கட்டை போடுகிற சூழ்நிலையில், அதையெல்லாம் கடந்து நெப்போலியன் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறான். குடும்பத்தின் வறுமைச் சழலிலும் நன்றாகப் படித்து, படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிற அவனுக்கு அதற்கு மேல் படிக்க முடியாமல் வேலைக்குப் போகிற நிலைமை உருவாகிறது.

இது ஒருபுறமிருக்க, நேப்போலியன் வசிக்கும் பகுதியில் இருக்கிற கல்லூரியில் பணிபுரிகிற பேராசிரியர் ஒருவர், ‘உங்களின் படிப்பை சிலர் தடுக்கத்தான் செய்வார்கள்; அவர்களையெல்லாம் எதிர்த்துப் போராடி நன்றாகப் படித்துவிட்டால் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்ற கருத்தை கீழ்தட்டு மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களின் படிப்புக்கு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். நேப்போலியன் அவரது வழிகாட்டலில், ஊக்குவிப்பில் நுழைவுத் தேர்வில் தன்னம்பிக்கையுடன் கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்கிறான்.

அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத அதிகார பலமிக்க மேல்சாதிக்காரர்கள் ‘நீ இந்தளவுக்கு வந்துட்டீயா? உன்னை இதுக்குமேல வளர விடமாட்டோம்’ என்ற வெறியோடு அவன் மீது பாய்கிறார்கள். அவன் அவர்களை ஆவேசத்தோடு எதிர்க்கிறான். அந்த எதிர்ப்பு அவனுக்கு என்னவிதமான பலன்களைத் தந்தது என்பது கிளைமாக்ஸ்…

படத்தை இயக்கி, நெப்போலியனாக நடித்திருக்கிற அலெக்ஸின் முகவெட்டும் உடற்கட்டின் செழுமையும் அதிரடி ஹீரோவாக, கலக்கலான காதலனாக, மிரட்டல் வில்லனாக, ஜாலியான பிளேபாயாக என எல்லாவற்றுக்கும் பொருந்தும்படி இருக்கிறது. சாதிய அவமானங்களைச் சந்திக்கிறபோது அதற்கேற்ற பரிதாப முகம் காட்டுபவர், எதிராளிகளைச் துவம்சம் செய்கிறபோது சூறாவளியின் சீற்றத்தோடு வெளிப்பட்டிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மாணவர்களை கல்வியால் உயர்த்திவிடுவதை நோக்கமாக கொண்டு, அதற்கு தடையாக இருக்கிற கல்லூரி நிர்வாகத்தையும் அரசியல்வாதியையும் துணிச்சலாக எதிர்க்கிற கனமான கதாபாத்திரத்தை தன் கம்பீரமான நடிப்பால் தூக்கிப் பிடித்திருக்கிறார் பேராசிரியராக புரட்சியாளர் ‘சேகுவேரா’வின் பெயரைச் சுமந்து வருகிற சத்யராஜ். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுகிற வேலைகளை யார் செய்கிறார்கள், உடல் உழைப்பு அவ்வளவாய் தேவைப்படாத பணிகளை யாரெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை மாணவர்களுக்கு புரியவைக்கும் காட்சிகள் கை தட்ட வைக்கின்றன.

கல்லூரி மாணவன் என்றாலும், படிப்பு பற்றிய நினைப்பு துளியுமில்லாமல் கீழ்சாதி மாணவன் நெப்போலியனை அவமானப்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் முழு நேரத் தொழிலாக செய்திருக்கிற நீலின் வில்லத்தனம் பரவாயில்லை ரகம்.

நீலின் அப்பாவாக வருகிற அனீஸுக்கு சாதிவெறி பிடித்த அரசியல்வாதி கேரக்டர். புத்தகம் படித்துக் கொண்டிருப்பது, படித்து முடித்ததும் அடியாட்களிடம் தன்னை எதிர்ப்பவர்களைக் கொலை செய்ய உத்தரவிடுவது என தன் பங்களிப்பை மிரட்டலாக வழங்க முயற்சித்திருக்கிறார்.

நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் என இன்னபிற நடிகர், நடிகைகளின் கதையோட்டத்துக்கு ஏற்ற நடிப்பு கச்சிதம்.

தன் பின்னணி இசையால் காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கும் பி எஸ் அஸ்வின், ஈஸ்வர் சந்திரசேகரின் பாடல் வரிகளில் நிரம்பியிருக்கிற புரட்சிச் சிந்தனைகளுக்கு வீரியமூட்டவும் தவறவில்லை.

ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சிகளில் வெட்டுக்குத்து, ரத்தத் தெறிப்பு அதிகம்.

‘கல்வி சார்ந்த சாதிப் பாகுபாடு இந்தக் காலத்திலும் இருக்கிறது’ என்பதை தன் கண்ணோட்டத்தில் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், புரட்சி, எழுச்சி என ஆயிரம்தான் பேசினாலும், அடக்குமுறைக்குத் தீர்வாக அமைவது வன்முறைதான் என்கிற யதார்த்தத்தை பதிவு செய்திருப்பது மனதைக் கலங்கடிக்கிறது.

கதாநாயகன் காதலிப்பது, காதலியுடன் ஆடிப்பாடுவது என மசாலா அம்சங்களைக் கலந்து கதையின் தீவிரத்தைக் குறைக்காமலிருந்ததை பாராட்டலாம்.

‘புரட்சி’யான சம்பவங்கள் அடுத்த பாகத்தில் அணிவகுக்க காத்திருக்கிறதாம்…

‘தோழர் சேகுவேரா’, ‘எழுச்சி’யின் முதற்படி!

 

-சு.கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here