‘தக்ஸ்’ சினிமா விமர்சனம்

ரத்தமும் சதையுமான கதைகளத்தில் மற்றுமொரு படம். ஐந்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஸ்வாதன்த்ரியம் அர்த்தராத்ரியில்’ என்ற மலையாளப் படத்தின் தழுவலாக ‘தக்ஸ்.’

தாதா ஒருவரிடம் வேலை செய்கிற நாயகன், தனது காதலியிடம் அத்துமீறியவனை போட்டுத் தள்ளுகிறார். அதற்காக சிறைக்கு சென்ற அவர், சக கைதிகளோடு கூட்டணியமைத்து சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிக்க திட்டமிடுகிறார்.அந்த திட்டத்தை செயல்படுத்துவது, அதிலிருக்கிற சவால்கள் என அடுத்தடுத்த காட்சிகள் பரபரக்கின்றன. திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் நடன இயக்குநர் பிருந்தா

புதுமுக நாயகன் ஹிருது ஹாரூன் இளமையாக, லட்சணமாக இருக்கிறார். காதல் காட்சியில் மென்முகம் காட்டுபவர் ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷப் பாய்ச்சல் நிகழ்த்துகிறார்!

கொஞ்ச நேரமே வந்தாலும் அகத்துக்குள் பதிகிறார் நாயகி அனஸ்வரா ராஜன்.

கொலைக் குற்றத்துக்கு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியாக சிம்ஹா, சிறை அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் மிரட்டலான நடிப்பால் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

சீரியஸான கதையோட்டத்தில் சற்றே சிரிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். தாதாவாக வருகிற தேனப்பனின் நடிப்பும் நிறைவு!

கதையின் பெரும்பாலான சம்பவங்கள் நடக்கிற சிறைச்சாலையின் உருவாக்கத்தில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

பின்னணி இசையை காட்சிகளின் தேவைக்கேற்ப விறுவிறுப்பாக கொடுத்துள்ள சாம் சி எஸ், ‘வீரசூர மாகாளி’ பாடலில் சூறாவளியாய்ச் சுழன்று சீறியிருக்கிறார்!

சவாலான இருள் காட்சிகளில் பிரியேஷ் குருசாமியின் கேமரா கண்கள் பெரியளவில் திறமை காட்டியிருக்கிறது!

பல அடுக்கு பாதுகாப்புள்ள சிறையிலிருந்து கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பிப்பதையெல்லாம் ஏற்கமுடியாவிட்டாலும், சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதத்தை அதன் வீரியம் குறையாமல் காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here