மூத்த பத்திரிகையாளர் ‘தினமலர்’ கவிதா அவர்களின் தலைமையிலான ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்’ தனது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவினை இன்று சென்னையில் சிறப்பாக நடத்தியது! நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
நிகழ்வில் இயக்குநர் இமயத்தின் 40 ஆண்டுகால கலைப்பயணத்தை பாராட்டி அவருக்கு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர்க் கிரீடமும், நினைவுப் பரிசும் வழங்கி கெளரவிக்கபட்டது. வாழ்த்து மடலும் வாசித்தளிக்கப்பட்டது!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் நினைவுப் பரிசு கொடுத்து கௌரவித்தார்.
நிகழ்வில் லோகேஷ் கனகராஜ், ”பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது ‘விக்ரம்’ வரையிலும் பத்திரிகையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. இதை மாநகரம் சந்திப்பில் கூட சொல்லியிருந்தேன். இந்த படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பத்திரிகையாளர்களான உங்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டு போய் சரியான முறையில் சேர்க்க முடியும் என தெரிவித்திருந்தேன். அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது எப்போது எங்கு நீங்கள் கூப்பிட்டாலும் நான் வர கடமைப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விழாவில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.பாரதிராஜா, ‘என் இனிய பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய பத்திரிகையாளர்களே’ என அவர் பாணியிலேயே ஆரம்பித்து தொடர்ந்து பேசினார்… ”பல வருடங்களாக சினிமா பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக பாசமாக கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியில்தான். இதில் பல முகங்களை 40 வருடங்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை என பார்த்துவிட்டேன் ஆனால் ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவதை பாக்கியமாக கருதுகிறேன். நெகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வசப்படாது அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்போது நான் இருக்கிறேன். இந்த சங்கத்தை நான்கு வருடங்களுக்கு மேல் ஒரு பெண் (கவிதா) தலைவியாக இருந்து கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அப்போதிருந்த பாரதிராஜா வேறு இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு இப்போது பொறுமையும் பக்குவமும் அதிகரித்துவிட்டது.
லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன் அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன். ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலைஞானம் உள்ளது.
கமல் ஒரு அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார் அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இப்படியான இயக்குநர்கள் எல்லாம் பார்க்கும்போது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை. நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன். ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமா காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அப்படித்தான் சினிமா பத்திரிகையாளர்களான நீங்களும் யாருக்குமே இல்லாத அளவிற்கு சினிமா பத்திரிகையாளர்களான உங்களிடம் சினிமா அறிவு இருக்கிறது. இத்தனை வருடங்களும் எந்த பத்திரிகையாளரும் என்னிடம் ஒரு பத்திரிகையாளராக நடந்து கொண்டதே இல்லை. சக நண்பனாக இருந்து என்னை விமர்சனம் செய்ததை காட்டிலும் நிறைய பாராட்டி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விழாவில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார் பெருமிதமாக.
நிகழ்வின் நிறைவாக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடந்தது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து வழங்கினர்.