தன் காதலியை மனைவியாக்கிக் கொள்ளும் நோக்கத்தில், விளையாட்டாக அரசியலுக்கு வரும் இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் விபரீதங்களே ‘உயிர் தமிழுக்கு.’
அந்த இளைஞன் காதலியைக் கைப்பிடிக்க அரசியல்வாதியாக வேண்டிய அவசியம் என்ன, அவனது அரசியல் எப்படிப்பட்டது, அவனால் மக்களுக்கு நடந்த நல்லது கெட்டது என்னென்ன, அவனால் நினைத்தபடி காதலியை அடைய முடிந்ததா இல்லையா என்ற கேள்விகளுக்கான பதில்கள் அறிமுக இயக்குநர் ஆதம் பாவா அமைத்திருக்கிற சுவாரஸ்யமான, விறுவிறுப்பான திரைக்கதையில்…
படத்தின் முன்பாதி முழுக்க, பெண் பார்க்கப் போகும் மாப்பிள்ளை போல பளபளப்பாக வருகிற அமீரின் தோற்றமே புத்துணர்ச்சி தருகிறது. சூதுவாது தெரியாமல் அரசியலுக்கு வந்து சூழ்ச்சிகளை கற்றுக்கொண்டு வார்டு உறுப்பினராகி, மாவட்டச் செயலாளராகி, தான் சார்ந்த கட்சியில் தவிர்க்க முடியாத நபராகி எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுவது வரை அமைதிப்படை அமாவாசை ரேஞ்சுக்கான அவரது அலப்பரை அடாவடி அத்தனையும் ரசிக்க வைக்கிறது. மனிதர் கண்களாலேயே ரொமான்ஸில் ஈடுபடுவதும் கவனம் ஈர்க்கிறது.
அமீரின் காதலியாக சாந்தினி ஸ்ரீதரன். அரசியல்வாதியின் மகளாக வருகிற அவர் காதலுக்குத் தேவையான கெமிஸ்ட்ரியை அளவாக அழகாக பரிமாறியிருப்பதோடு, தன் அப்பாவை பறிகொடுத்தபின் தீவிர அரசியலில் இறங்கி, காதலனுக்கு விரோதியாகி, அவனை எதிர்த்து போட்டியிட்டு தேர்தல் களத்தை சூடாக்குவது வரை நடிப்புப் பங்களிப்பில் குறையேதுமில்லை.
மூத்த அரசியல்வாதியாக, கதாநாயகிக்கு அப்பாவாக ஆனந்த்ராஜ், கதாநாயகனுக்கு மாமனாக இமான் அண்ணாச்சி, அமைச்சராக இயக்குநர் ராஜ்கபூர் என தேர்ந்த நடிகர்கள் பலர் பொருத்தமான பாத்திரங்களில் நிறைந்திருப்பது கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறது.
வித்யாசாகரின் பின்னணி இசை பரவாயில்லை ரகமாக டெலிவரியாகியிருந்தாலும், பாடல்களில் உற்சாகத்துக்குப் பஞ்சமில்லை. எஸ்.பி.பி. (கடைசியாக) பாடிய ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு’ பாடலில் எனர்ஜி எகிறுகிறது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
கதைச்சூழலுக்கு பொருந்தும்படி சமகால அரசியலை, அரசியல்வாதிகள் செய்கிற கேலிக்கூத்துகளை இழுத்துப் போட்டு வெளுத்து வாங்கியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். அதே சாமர்த்தியத்தை பல படங்களில் பல இயக்குநர்கள் முன்பே காட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க சேதி.
தலைப்பைப் பார்த்து, மொழிப் புரட்சிக்கான படமாக இருக்குமோ என்றெல்லாம் யோசித்து தியேட்டருக்கு போனால் ஏமாந்து போவீர்கள். இது ஒரு அரசியல் நையாண்டிப் படம் என்ற நினைப்போடு போனால் கணிசமான திருப்தி கண்டிப்பாய் கிடைக்கும்.
உயிர் தமிழுக்கு, நல்லதொரு பொழுதுபோக்குக்கு!