மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா’ படத்தில் ஒப்பந்தமான ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்!

மோகன்லால், ரோஷன் மேகா உள்ளிட்ட மிகச்சிறந்த நடிகர்கள் நடிக்க, சஹ்ரா எஸ் கான், ஷனாயா கபூர் அறிமுகமாகும் பான் இந்திய திரைப்படம் ‘விருஷபா.’
ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017) உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ். அவர் விருஷபா’வில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் பிரபலமான நிக் துர்லோவ் இணைந்திருப்பதால் படத்தின் தரம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

அந்த வகையில் படத்தின் தரம்  மற்றும் பிரமாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக, தயாரிப்பாளர்கள் 57 வினாடிகள் ஓடுகிற அறிமுக வீடியோவை வெளியிட்டனர். அதில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில், பிரமாண்ட செட் அமைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. படத்தின் முழுப் பணிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது .ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றும், இந்த பாணியை இந்தியாவில் பின்பற்றும் முதல் படம் விருஷபா என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து நிக் துர்லோவ், “விருஷபா எனது முதல் இந்தியப் படம், இப்படத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நிர்வாக தயாரிப்பாளராக, திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் நான் கவனம் செலுத்துவேன். எனது நாட்டுக்கு வெளியே, ஒரு பன்மொழித் திரைப்படத்தில், பணிபுரிவது இதுவே முதல் முறை.  ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது, ஏதாவது கற்றுக் கொடுக்கிறது அந்த வகையில், விருஷபா படத்தின் அனுபவமும் அசாதாரணமாக இருக்கும் என்று  நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் விஷால் குர்னானி “நிக் துர்லோவ் எங்களுடன் இணைந்திருப்பதால், எங்கள் படம் எவ்வளவு  பெரிய பட்ஜெட்டில், எவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதை உணர முடியும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் தயாரிக்கப்படும்  முதல் இந்தியப் படங்களில் விருஷபா ஒன்றாக இருக்கும். ஹாலிவுட் ஆளுமை ஒருவர் எங்கள் குழுவில் இணைந்திருப்பது அதிர்ஷ்டம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here