ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகியிருக்கும் தொடர் ‘வேற மாறி ஆஃபீஸ்.’
ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில் வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வை நிமிடங்களை இந்த தொடர் பெற்றிருக்கிறது. அதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் நெக்சஸ் விஜயா மால் வளாகத்தில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் வேற மாறி ஆபீஸின் நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ், தொடரின் இயக்குநர் சிதம்பரம் மணிவண்ணன், தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘எமர்ஜென்ஸி’, ‘வல்லமை தாராயோ’, ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட வெப் தொடர்களின் இயக்குநரும் வேற மாறி ஆபிஸ்’ தொடரின் இயக்குநருமான சிதம்பரம் மணிவண்ணன் பேசும் போது, ‘‘ஆஹா ஓடிடி இணையதள நிர்வாகிகளுக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சத்யா, கலை இயக்குநர் வாசுதேவன், இசையமைப்பாளர் சரண் ராகவன், எடிட்டர் சித்தார்த்தா ரவீந்திரநாத், காஸ்டியூம் டிசைனர் சிமோனா எழுத்தாளர் சத்யா சரவணன் என அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த மேடை பலருக்கும் முதல் மேடை. நான் இதற்கு முன் மூன்று வெப் தொடர்கள் இயக்கி இருந்தாலும் இது போல் ஒரு விழா மேடை இதுவே முதல் முறை, இந்த வெஃப் தொடரைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பொதுமக்களிடம் கொண்டு போய் சேருங்கள். உங்களால் தான் அது முடியும்.
தொடரில் நடித்த அனைவருமே பிஸி ஆர்டிஸ்ட். வி.ஜே, ஆர்.ஜே, ஸ்டேண்ட் அப் காமெடியன்கள், சீரியல் நடிகர் நடிகைகள் அனைவரையும் ஒன்றிணைப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் என் உதவி இயக்குநர்கள் சூர்யா, விஜய் ரத்னம், பூர்ணசந்திரன் மற்றும் மேலாளர் வீர சங்கிலி அவர்களும் சிறப்பாக பணியாற்றி என் வேலைப் பளுவை பெரிதும் குறைத்து உதவினார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.
வி.ஜே.பார்வதி பேசும் போது, ‘‘நான் நன்றாகப் பேசுவேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு நடிக்க கொஞ்சமாவது வரும் என்பதை எனக்குப் புரிய வைத்தவர் இயக்குநர் சிதம்பரம். அவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.
ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும் போது, ‘‘எங்கள் அணி மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி. என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.
இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள்” என்றார்.
ஆர்.ஜே. சரித்திரன் பேசும் போது, ‘‘என் கதாபாத்திரம் ஒரு சிடுமுஞ்சி ஹெச்.ஆர் கதாபாத்திரம். எப்பொழுதும் வடை போச்சே என்று நான் தான் பிற கதாபாத்திரங்களை கலாய்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த தொடரில் எல்லோரும் என்னை கலாய்ப்பார்கள். எவருக்குமே என்னைப் பிடிக்காது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம். இன்றைய காலச்சூழலில் பணிச்சுமை எவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதும் இக்கதையில் இருக்கிறது. அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து ஆதரவு தாருங்கள். நான் அடிமட்ட நிலையில் இருந்து பல தடைகளை அவமானங்களை கடந்து இந்த இடத்திற்கு வந்தவன். அதனால் உண்மையாகவே நான் ஹெச்.ஆர் என்னும் பதவியில் இருந்தால் கூட நான் அனுபவித்த கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய மாட்டேன். அதுதான் மனிதம் என்று கருதுகிறேன்” என்றார்.
நிகழ்வில் தொடரின் நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர், தயாரிப்பு தரப்பினர் என பலரும் பேசினார்கள்.