நம் ரத்த சொந்தங்கள் வாழும் பூமியில் நடந்த அநியாய அராஜகங்களின் ஆவணமாக ஒரு படம்.
தமிழ்நாட்டின் அருகிலிருக்கும் அண்டை நாட்டில் தன் இன மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடி பேரிழப்புகளைச் சந்தித்த அந்த உலகறிந்த போராளியின் வலியை, அந்த மண்ணில் மக்கள் பட்ட இப்போதும் படுகிற நரக வேதனைகளை பதிவு செய்கிற திரைப்படங்களின் வரிசையில் இன்னொரு படம். அந்த போராளியின் குழந்தை அனுபவித்த கொடுமைகளைச் சுற்றிச் சுழலும் விதத்திலான படைப்பு என்பது இந்த படத்தின் தனித்துவம்.
போராட்டக் குழுவின் தலைவரை கொன்று திருப்தியடைந்த அந்த நாட்டு ராணுவம், தலைவரின் மகனை இழுத்து வந்து சிறையில் அடைக்கிறது. முழுமையாக குழந்தைப் பருவத்தைக் கூட தாண்டாத அந்த சிறுவனிடம் நடத்தும் விசாரணைகளின் மூலம் அவனிடம் தந்தையைப் போலவே மரண பயமில்லாத துணிச்சல் இருப்பதை தெரிந்து கொள்கிறது. லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராணுவம் குழந்தையின் மீதெல்லாம் இரக்கம் காட்டாது என்பது நமக்கு புரிவது ஆச்சரியமில்லை. அந்த சிறுவனுக்கும் புரிகிறது என்பதுதான் ஹைலைட். ‘புலி‘க்குப் பிறந்தது புலியாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இருக்கட்டும்…
அந்த குட்டிப்’புலி’யை பாதுகாக்கும் பொறுப்பிலிருப்பவருக்கு அந்த புலி மீது அக்கறை வருகிறது என்பதுதான் டிவிஸ்ட். அந்த அக்கறை என்னென்ன விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்கும்போது மனம் கலங்குகிறது…
கதையின் நாயகனாக வருகிற சிறுவன் அத்வைத், ராணுவ விசாரணையில் ஈவிரக்கமில்லாத அதிகாரிகளிடம் கம்பீரமாக குரல் உயர்த்திப் பேசுவதாகட்டும், தன் குளிரைப் போக்க வழங்கப்படும் போர்வையையும் தனக்கு வழங்கப்படும் தின்பண்டங்களையும் சிறைக்குள் அவதிப்படும் பச்சிளங் குழந்தைக்கு கொடுக்கச் சொல்வதாகட்டும், தன் மீது அன்பு செலுத்தும் அதிகாரியின் மகனிடம் போனில் பேசி உறவாடுவதாகட்டும் சற்றே மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. சிறுவனுக்கு இயக்குநர் இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுத்திருக்கலாம்.
தான் பணிபுரியும் ராணுவம் கொன்று தீர்த்த தலைவரின் மகனை சிறையில் பாதுகாக்கும் பொறுப்பை சுமக்கிற, குழந்தையாகவே இருந்தாலும் அதுவும் நமக்கு எதிரிதான்; கொன்றழிக்க வேண்டிய உயிர்தான் என்பதை கொள்கையாக வைத்திருக்கிற ராணுவத் துறையின் அதிகாரியாக அன்புமணி. ஒரு கட்டம் வரை அந்த சிறுவனிடம் இறுக்கமான முகத்துடன் கடுமை காட்டுபவர், போகப்போக இரக்க குணத்துக்கு தாவும்போது நடிப்பில் பொருத்தமான வித்தியாசம் காட்டி கவர்கிறார். படத்தை உயிரோட்டத்துடன் இயக்கியிருப்பவரும் அவர்தான்!
‘மனிதாபிமானம் என்றால் என்ன?’ என்று கேட்கும் விதத்தில் நடந்துகொள்ளும் ராணுவ அதிகாரிகள்,
சிறைக்குள் கொடுமைகளை அனுபவித்தாலும் தைரியத்தை விட்டுவிடாத, சிறையில் தங்கள் தலைவரின் மகனைப் பார்த்து தலைவருக்கு இணையாக மதித்து மரியாதை செலுத்துகிற மக்கள்,
ராணுவ அதிகாரிகளின் காமவெறிக்குப் பலியாகிற பெண்கள் என கனமான பாத்திரங்களை ஏற்றிருக்கும் அத்தனை பேரும் உணர்வுபூர்வமாக நடித்து படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாகியிருக்கிறார்கள்.
ராணுவ அதிகாரிகள் பலரும் தன் உடம்பை கொத்திக் குதறுவார்கள் என்பதால் தன்னை கொன்றுவிடச் சொல்லும் பெண், அவளை கொன்றதற்காக ராணுவத்தினரின் சித்தரவதைக்கு ஆளாகும் இளைஞன், அந்த இளைஞன் அந்த பெண்ணின் சகோதரன் என விரியும் காட்சிகள் மனதை ரணமாக்குபவை.
பல காட்சிகள் மங்கிய வெளிச்சத்திலேயே கடந்தோட அவற்றை பார்வைக்கு உறுத்தாமல் படமாக்கியிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஸ்ரீஜித் விஜய்யின் கேமரா.
பிஜூ ரவிந்திரனின் வசனங்கள் ஒட்டுமொத்த போராளிகளின் குரலாக வந்து விழுகின்றன.
பின்னணி இசை, பாடல்கள் பரவாயில்லை ரகம்.
எளிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் காட்சிகளில் நாடகத்தனம் எட்டிப் பார்க்கிறது.
நம் அண்டை நாட்டின் ஒரு பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் அவர்களின் உரிமைக்காக எதிர்கொண்ட போராட்டம், அனுபவித்த வலிகள், இழந்த உயிரிழப்புகள் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அந்த வலிகளின் ஒரு பகுதியை பதிவு செய்திருக்கும் இந்த படம், எந்த மண்ணின் கொடூரங்களைப் பதிவு செய்கிறது என்பதையும் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமலும் அந்த பகுதியின் பேச்சு வ்ழக்கைக்கூட பயன்படுத்தாமலும் உருவாகியிருக்கிறது என்பது நாட்டில் கருத்துச் சுதந்திரம் எந்தளவில் இருக்கிறது என்பதற்கு சான்று.
வீரத்தின் மகன் _ வரலாற்றின் கருப்புப் பக்கம்; கண்ணீர்க் கடலின் ஒற்றைத் துளி!
-சு.கணேஷ்குமார்

