தமிழ்த் திரையுலகில் வாராவாரம் ஏழெட்டுப் படங்கள் வெளியானாலும் மிகச்சில படங்கள் மட்டுமே கணிசமான வெற்றியைப் பெறுகின்றன. அப்படியான சூழ்நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வருகிற படம் ‘வா பகண்டையா.‘
நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் சூழலில், படத்திற்கு சென்சாரிலிருந்து உருவான நெருக்கடிகளைச் சமாளித்து படத்தை திரைக்கு கொண்டுவருகிறார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி. ஜெயக்குமார்.
இந்த நிலையில் படம் பற்றி தெரிந்துகொள்வதற்காக இயக்குநரை சந்தித்தோம்…
உங்கள் படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?
”வா பகண்டை என்பது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊர். வித்தியாசமாக இருக்கட்டும் என்று அந்த ஊர்ப் பெயரை எடுத்துக் கொண்டு, ‘பகண்டையா’ என்பதை ஹீரோவின் கதாபாத்திரப் பெயராக வைத்துள்ளேன்.”
படம் எதைப் பற்றி பேசுகிறது? படத்தின் மையக்கரு என்ன?
”சமூக நீதி பற்றி பேசுவதுதான் இந்த படத்தின் நோக்கம். கல்வி, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வு என பலவற்றையும் பேசியிருக்கிறோம். அரசியல் என்றால், உள்ளூர் அரசியல் மட்டுமில்லை. உலக அரசியல் பற்றி, அங்குள்ள அரசியல் சட்டங்கள், பொருளாதாரம் பற்றியெல்லாம் கூட பேசியிருக்கிறோம். நம்மூரில் லஞ்சத்தால் பாதிக்கப்படுகிற மக்களின் நிலை பற்றியும் அக்கறையோடு காட்சிகளை வைத்திருக்கிறோம்.”
டிரெய்லரை பார்த்தால் சாதிப் பிரச்சனை பற்றிய படமாக இருக்கும் போலிருக்கிறதே?
”சமூக நீதி என்றாலே சாதி இல்லை என்று சொல்வதுதான். ஆகவே இது சாதி பற்றிய படமோ, எந்த சாதியையும் தூக்கிப் பிடிக்கிற படமோ, எந்த சாதியையும் தாழ்த்திப் பேசுகிற படமோ இல்லை. அதேபோல் எந்தவொரு அரசியல் கட்சியையும் தனிப்பட்ட முறையில் தாக்குகிற நோக்கத்தில் இந்த படத்தை எடுக்கவில்லை. படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். டிரெய்லரை பார்த்து முடிவு செய்ய வேண்டாம்.”
எந்த அரசியல் கட்சியையும் தாக்கவில்லை என்று சொல்கிறீர்கள். படத்தில், சாதிங்கிறது மாம்பழத்திலிருக்கும் வண்டு மாதிரி என்று வசனம் வைத்திருக்கிறீர்கள். மாம்பழம் பா.ம.க.வின் சின்னமாயிற்றே…
”கதைக்கு தேவைப்பட்டதால், பொருத்தமாக இருந்ததால் வைத்துள்ளேனே தவிர அதில் கண்டிப்பாக எந்த அரசியலும் இல்லை.”
உங்கள் படத்தில் பிரதமர் மோடியின் சாயலில் உள்ள ஒருவர் நடிக்கிறாரே. அதனால் உங்கள் படத்தை பா.ஜ.க. ஆதரவுப் படமாக எடுத்துக் கொள்ளலாமா?
”அதை நான் இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்த்து மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.”
படத்துக்கு சென்சார் தரப்பில் எதிர்ப்பு உருவானதாக கேள்விப்பட்டோமே?
”பிரபலமான அரசியல் தலைவர் அதாவது மோடி போலிருக்கிற ஒருவர் நடிப்பதால் சிறு சிக்கல் உருவானது. இத்தனைக்கும் அவர் கெஸ்ட் ரோலில்தான் வருகிறார். அதையடுத்து, படம் அரசியல் பேசுவதால் 50க்கும் மேற்பட்ட கட் கொடுத்தார்கள். யூ ஏ சான்றிதழ்தான் கிடைத்தது.
அடுத்ததாக இது தேர்தல் நேரம் என்பதால் படத்தின் டீசரை யூ டியூபில், சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்து விட்டார்கள். இப்படி அரசியல் சார்ந்த படமெடுக்கிற பலரும் சந்திக்கிற பிரச்சனைகளை நானும் சந்தித்தேன். அதையெல்லாம் தாண்டித்தான் படம் திரைக்கு வருகிறது.”
படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறதா?
”கருத்துக்களை கமர்ஷியல் அம்சங்கள் கலந்து சொன்னால்தான் எடுபடும் என்பதை மனதில் வைத்தே திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். அந்த வகையில், காமெடி, ஃபைட், பாடல்கள் என எல்லாமும் இருக்கிறது. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் ஏழு பாடல்கள் இருக்கிறது. அதில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்களை மக்கள் அதிகம் ரசிப்பார்கள். எஸ்.பி.பி. கடைசியாக பாடியது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்கும்.
டெக்னிஷியன்களும் பிரபலங்கள்தான்… தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பை கவனித்துள்ளார். இப்படி படம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.”
படத்தை வெளியிட எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்திருக்கிறதா?
”தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 200 தியேட்டர்களில், சென்னையில் 50லிருந்து 60 தியேட்டர்களில் வெளியிடுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் திருப்தியான எண்ணிக்கைதான்.”
உங்கள் படம் வெளியாகும் நாளில் வேறு இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வருகிறதே. அவர்களுக்குப் போட்டியாக உங்கள் படத்தை கொண்டு வருகிறீர்களா?
”எந்த படத்தையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மக்களுக்கு பிடித்த படம் வெற்றியடையும்; பிடிக்கவில்லை என்றால் தோல்வியடையும். அப்படித்தான் நான் பார்க்கிறேன்.”
உங்களின் அடுத்த படம்?
”’ஆளுமை என்ற பெயரில் ஒரு கமர் ஷியல் படம் இயக்கி தயாரிக்கவிருக்கிறேன். அது பற்றி விரைவில் விரிவாக தெரிவிக்கிறேன்.”
வா பகண்டையா படத்தின் டிரெய்லர்:-