அடிமைத்தனத்திலிருந்து விடுபட உயிரையும் இழப்பதற்கு தயாராகிற மக்களால் உருவாகும் புரட்சி மட்டுமே தீர்வு என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேரள மண்ணில் கம்யூனிச கொள்கைகளை முன்வைத்து ஜமீன்தார்களிடம் கொத்தடிமையாகிக் கிடந்த மக்களை மீட்டெடுத்த பி கிருஷ்ணபிள்ளை. அவரது வாழ்க்கை வரலாற்றை (1940 காலகட்டத்திலிருந்து 1946 வரை) பதிவு செய்திருக்கும் படம் இது.
தன் கொள்கைக்கு ஒத்துப்போகிற ‘தோழர்’களின் ஒத்துழைப்போடு மக்களை அடிமையாக நடத்துபவர்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்குவது, மக்களிடம் பேசிப்பேசி புரட்சிக்கான உத்வேகத்தை உருவாக்குவது, மக்கள் சக்தியைத் திரட்டி மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகார ஆளுமை காட்டுபவர்களின் அராஜகத்தை அடக்குவது என மக்களுக்கான தலைவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவரின் கதாபாத்திரத்துக்கு தேவையான கம்பீரத்தை தனது நடிப்பிலும் பேசுகிற வசனங்களிலும் கொண்டு வந்திருக்கிறார் கிருஷ்ணபிள்ளையாக களமாடுகிற சமுத்திரகனி.
புரட்சிப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரின் பேரனாக, பணக்காரராக இருந்தாலும் சாதியில் தாழ்ந்த ஏழை எளிய மக்களை தனக்கு சமமாக கருதிப் பழகுவது, தாழ்ந்த சாதி இளைஞனை தன் தங்கை காதலிப்பது தெரிந்து எதிர்ப்பு காட்டாமல் சேர்த்து வைப்பது என பெரிய மீசையோடு வருகிற பரத் பெரிய மனிதர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக கடமையாற்றியிருக்கிறார்.
ஊரில் பெரும் செல்வந்தராக, மக்களை அடிமையாக நடத்திக் கொண்டிருப்பவராக, போலீஸார் உள்ளிட்ட அதிகாரத்தில் உள்ளவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை எதை வேண்டுமானாலும் செய்ய முடிந்தவராக, ஊரில் எந்த பெண்ணுக்கு கல்யாணம் அவளுடன் முதலில் உடலளவில் இணைகிறவராக வருகிறவர் காட்டியிருக்கும் வில்லத்தனம் வீரியமாக இருக்கிறது.
போராளிகளில் ஒருவராக வருகிற ரித்தேஷ், செல்வந்தரின் மகனது காமப் பார்வையில் சிக்கி மீண்டு வருகிற சுரபி, சுரபியின் வயது முதிர்ந்த வேடத்தில் புரட்சி பாடகி பி.கே.மேதினி என மற்றவர்கள் அவரவர் பாத்திரங்களுக்குத் தகுந்த நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்களின் ஈடுபாட்டை இழுத்து தனக்குள் பொருத்திக் கொண்டதோடு, கவியரசுவின் தரமான ஒளிப்பதிவையும் சேர்த்துக் கொண்டு படம் தரம் உயர்த்தியிருக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காமத்தை மையப்படுத்தியே சுற்றிக் கொண்டிருப்பது சலிப்பூட்டுகிறது.
புரட்சியாளர்களின் வரலாற்றைப் படிப்பது, காட்சிகளாகப் பார்ப்பது உத்வேகம் பெறவும் அறிவு மேம்பாட்டுக்கும் உதவும் என்ற வகையில் கேரளத்தின் புரட்சித் தலைவர் கிருஷ்ணபிள்ளையின் வரலாற்றை பார்க்கலாம். அதை பதிவு செய்திருக்கிற இயக்குநர் அனில் வி.நாகேந்திரனை பாராட்டலாம்.

