நாட்டில் நடக்கிற பல்வேறு குற்ற செயல்களை எடுத்துக் காட்டி, அதற்கு சட்டப்படி கிடைக்கிற (அல்லது படத்தின் இயக்குநர் நியாயப்படி கொடுக்க விரும்புகிற) தண்டனைகளின் நீள அகலங்களை அலசுகிற படங்களின் வரிசையில் புதுவருடத்தின் முதல் வரவாக ‘V3.’
‘குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதால் மட்டும் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் தர முடியாது; ஆகவே தீர்வு என்ன என்பதை யோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்‘ என்று சொல்ல முன்வந்திருப்பது ‘V3’யின் வித்தியாசம்; தனித்துவம்!
இரவு 10 மணியளவில் தனது டூ வீலரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் அந்த இளம்பெண், அவ்வளவாக மனித நடமாட்டமில்லாத இடத்தில் சில இளைஞர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிறாள். எரிந்த நிலையில் அவளது உடல் காவல்துறைக்கு கிடைக்கிறது.
அவளது மரணத்துக்கு ஐந்து இளைஞர்கள் காரணம் என்பதை கண்டறிந்து, அவர்களை பிடித்து, வழக்கு விசாரணை ஏதுமின்றி என்கவுன்டர் செய்கிறது காவல்துறை.
என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் பெற்றோர் தரப்பில், ‘எங்கள் பிள்ளைகள் அந்த குற்றத்தை செய்திருக்க வாய்ப்பில்லை’ என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையின் அடிதடிக்கு ஆளாகி ரத்தம் சிந்துகிறார்கள்.
‘குற்றம், நடந்தது என்ன?’ என்கிற ரீதியில் விசாரணையில் இறங்குகிறது மனித உரிமைகள் ஆணையம்.
அந்த விசாரணையில் கிடைக்கிற விவரங்கள், என்கவுண்டருக்கு பின்னணியில் நடந்த சதிகள், அதற்கான காரணங்கள் அத்தனையும் அதிரவைப்பவை; திருப்பங்கள் நிறைந்தவை; சீரழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிற சமூகத்தை அடையாளம் காட்டுபவை; காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை… இயக்கம்: அமுதவாணன்
காவல் துறையினரையே நிற்க வைத்து கேள்வி கேட்குமளவு அதிகாரமுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் உயரதிகாரியாக வரலெஷ்மி சரத்குமார். நடையிலும் பேச்சிலும் அந்த பதவிக்கான கம்பீரத்தை வெளிப்படுத்துவதாகட்டும், பிள்ளைகளை என்கவுன்டருக்கு பலிகொடுத்துவிட்டு கதறும் விளிம்புநிலை மக்களின் கண்ணீருக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதில் உறுதி காட்டுவதாகட்டும் அத்தனையிலும் வருவிடமிருந்து வந்திருப்பது தேர்ந்த நடிப்பு!
‘ஐந்து அண்ணன்கள் என்னைச் சீரழித்தார்கள்’ என்று சொல்லி கலங்குகிற பாவமான கதாபாத்திரத்தில் பாவனா. அவருக்கான காட்சிகள் எல்லை மீறியது போலிருந்தாலும் நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி!
மகளைப் பறி கொடுத்து கதறும் காட்சியில் ‘ஆடுகளம்’ நரேன் நடிப்பில் உயிரோட்டம் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையாக வருகிற எஸ்தரின் (‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்த குட்டிப் பாப்பா இதில் டீனேஜ் பெண்) நடிப்பிலிருக்கும் பரபரப்பு அவர் சார்ந்த காட்சிகளுக்கு சரியாகப் பொருந்துகிறது!
இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் தங்களின் நடிப்பால் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ரியாலிடி என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கிற, பாலியல் குற்றவாளிளை அந்த செயலில் எப்படி ஈடுபட்டார்கள் என்பதை நடித்துக் காட்ட வைக்கும் காட்சி முகம்சுளிக்க வைக்கிறது!
கதைக்களம் பழகிப்போனதுதான் என்றாலும், உருவாக்கத்தில் குறிப்பிட்டு சொல்ல சில குறைகள் இருந்தாலும் பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கு ‘V3’ சொல்கிற தீர்வு உங்களை ஒருகணம் யோசிக்க வைக்கும்!