‘வா வரலாம் வா’ சினிமா விமர்சனம்

சாதா திருடர்கள் ஸ்பெஷல் திருடர்களாக மாறுகிற கதை.

‘திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் யோகம்’ என்பதுபோல், சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களுக்கு (பாலாஜி முருகதாஸ், ரெடின் கிங்ஸ்லி) ஒரு ஏசி பேருந்தை பள்ளிக் குழந்தைகளோடும் இரண்டு இளம் பெண்களோடும் கடத்தும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைக்கிறது.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடத்தியவர்களை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு, அவர்களின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டமிடுகிறார்கள். அதன் விளைவுகள் என்னவானது என்பதே கதை… படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்.

பிக் பாஸில் ஷிவானியை காதலித்து பரபரப்பூட்டிய பாலாஜி முருகதாஸுக்கு அறிமுகப் படம். பளீர் நிறம், நெகுநெகு உயரம், வாட்டசாட்டமான தேகம் என்றிருப்பவருக்கு கிடைத்திருப்பது சின்ன திருடன் கடத்தல் பேர்வழியாய் மாறுகிற கதாபாத்திரம். பள்ளிப் பிள்ளைகளை கடத்தும்போது பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட மனநிலை, கடத்தியபின் அவர்கள் மீது அக்கறை உருவான மனநிலை, கடத்தியதில் ஒரு பெண்ணுடன் காதல் என நடிப்பில் முடிந்தவரை திறமை காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அசத்தலாய் ஆடியிருக்கிறார்.

பாலாஜிக்கு ஜோடியாக ‘கருமேகங்கள் கலைகின்றன’ மஹானா சஞ்சீவ். டூயட் பாடலுக்காக அம்மணி செய்திருக்கும் ஆடை குறைப்பில் வெளிப்படும் வளைவு நெளிவுகள் சிலருக்கு போதையேற்றலாம்.

திருட்டு, கடத்தல் என கதைக்களம் சீரியஸ் என்றாலும் கிடைக்கிற கேப்பில் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.

எளிமையான கதைக்களத்துக்கேற்ப எளிமையாக வில்லத்தனம் செய்கிறார் மைம் கோபி. அவருடன், உடல்வாகில் ஹேர்ஸ்டைலில் யோகிபாபுவை நினைவூட்டுகிற ஒருவர் எந்நேரமும் சாப்பாட்டுப் பொட்டலத்தை தூக்கிகொண்டு திரிகிறார். அந்த சாப்பாடு போலீஸிடம் சிக்கியதும் ஜீரணமாவது ‘உவ்வே’ காமெடி.

இன்னொரு ஹீரோயினாக வருகிற காயத்ரி ரெமாவுக்கு முந்தைய படங்களைப் போல் அழுதுவடியாத கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். சிங்கம் புலி, தீபா சங்கர் ஜோடி அச்சுப்பிச்சு காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கடத்தல்காரர்களை சந்தர்ப்பம் பார்த்து நெருங்க ஸ்கெட்ச் போட்டு செயல்படுத்தும் காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் சரவணன் சுப்பையா, சக போலீஸாக பயில்வான் ரங்கநாதன், தலைவெட்டி கோவிந்தன் என்ற பெயரில் தலைகாட்டுகிற வையாபுரி, வாசு விக்ரம், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், ரஞ்சன், போராளி’ திலீபன் உள்ளிட்டோரின் பங்களிப்பு நிறைவு.

தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்துப் பாடியிருக்கும் ‘ஜிலுஜிலுனு ஏத்துறியே ஜிகருதண்டா போல’ பாடல் உற்சாகம் தெறிக்கும் இசை விருந்து. பாடலில் இடம்பிடித்திருக்கும் வரிகளில் குவிந்துகிடக்கிறது சுயமுன்னேற்றச் சிந்தனை. பாடலுக்கு ஆடியிருக்கும் அஸ்மிதாவின் கவர்ச்சி விருந்து மிக்ஜாம் புயல்மழை நேரத்தில் ஆண்கள் தங்களை சூடேற்றிக் கொள்ள உதவும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல் அமைந்த ‘சொல்லப் போறேன் சொல்லப் போறேன்’ பாடலும் அதற்கான சின்னஞ்சிறு பிள்ளைகளின் நடனமும் கவர்கிறது. ‘உன்னைத்தானே உன்னைத்தானே’ காதல் பாடலும் ஈர்க்கிறது.

சண்டைக் காட்சிகளில் ‘இடி மின்னல்’ இளங்கோ தன் பங்களிப்பால் அதிரடி அட்டனன்ஸ் போட, எடிட்டிங்கில் நேர்த்தி காட்டியிருக்கிறார் ராஜா முகமது.

‘வா வரலாம் வா’ படத்தை ‘பார்க்கலாம் போ’ என்று சொல்ல கதையில் இருக்கிறது சற்றே விறுவிறுப்பு, காமெடி, காதல் சுவாரஸ்ய மசாலா சேர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here