மனிதர்கள் மீது மனிதர்கள் வைக்கும் காதலின் நீள அகலங்களை பல கோணங்களில் பல படங்களில் பார்த்தாயிற்று. மற்றுமொரு முறை பார்ப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது ‘வான் மூன்று.’
டீனேஜ் என்கிற வளரிளம் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தை தொடுகிற வயதிலிருக்கிற ஒரு பையன், ஒரு பெண். இருவரும் வெவ்வேறு நபர்களால் காதல் தோல்விக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயற்சி செய்து உயிர் மீட்புக்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள்.
அதே மருத்துவமனையில் ஒரு இளைஞன், குறிப்பிட்ட ஒரு வியாதிக்கு ஆளாகி எப்போது வேண்டுமானாலும் மரணத்தைச் சந்திக்கலாம் என்கிற நிலையிலிருக்கிற தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறான்.
அதே மருத்துவமனையில், தன் மனைவியை நோயிலிருந்து மீட்க சிலபல லட்சங்கள் செலவாகும் என்ற நிலையில் பணத்துக்காக தள்ளாத வயதில் அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு சீனியர் சிட்டிசன்.
அந்த மூன்று தரப்பினரும் அடுத்தடுத்து சந்திக்கிற சவால்கள், அவர்களுக்கு ஏற்படுகிற இழப்புகள், கிடைக்கிற பலன்கள் என கலந்துகட்டி நகர்கிறது திரைக்கதை. இயக்கம் ஏ எம் ஆர் முருகேஷ்
சரியான வயது, சரியான ஜோடிப் பொருத்தம், இயல்பான நடிப்பு என கவர்கிறார்கள் ஆதித்யா பாஸ்கரும் அம்மு அபிராமியும்!
தன் மனைவி இறப்புக்கு முன் தன் அப்பாவை பார்க்க விரும்பியதற்காக அவரை அழைக்கப் போய், ‘அவ செத்தாலும் நான் வர மாட்டேன்’ என அவர் சீறிப் பாய, ‘அவ நெசமாவே செத்துடுவா போலிருக்கு’ என்பதுபோல் கலங்கி நின்று, பின் ஆக்ரோஷமாக வெடிக்கும்போது வினோத் கிஷனிடமிருந்து தேர்ந்த நடிப்பு. மரணத்திற்கு அருகிலிருக்கிற தருணத்தை, அது தருகிற வலியை கச்சிதமாக கடத்தியிருக்கிறார் அபிராமி வெங்கடாசலம்.
மகள் சாதி மாறி காதலித்து மணமுடித்த காரணத்தால் வெறுப்பிலிருந்தாலும், அவள் தன் வாழ்நாளின் கடைசியில் இருக்கிறாள் என்பது தெரியும்போது மனமுடைகிற பாத்திரத்துக்கு கனிவான நடிப்பால் கனம் சேர்த்திருக்கிறார் கோபால்.
வயதான தம்பதியாக டெல்லி கணேஷ் – லீலா சாம்சன். அவர்களது நடிப்பில் வெளிப்படும் தளர்ச்சியான வயதின் முதிர்ச்சியான அந்நியோன்யம் ஏற்ற பாத்திரங்களுக்கு ஏகப் பொருத்தம்.
கதையில் வெவ்வேறு வயதில் மூன்று ஜோடிகள், கதை நடப்பது ஒரே மருத்துவமனையில் என எளிமையான கதைக்களம். அதற்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார்கள் ஆர் 2 பிரதர்ஸ்!
சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.
காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி வரை சென்ற ஆதித்யா, தன்னைப் போலவே காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட அபிராமியை நேசிப்பது போல் கதையை நகர்த்தியதெல்லாம் சரிதான். ஆனாலும், ஆதித்யா முந்தைய காதல் தோல்வியிலிருந்து ஒருசில நாட்களிலேயே மீள்வது போல் காட்டியிருப்பதை ஜீரணிப்பது சிரமம்!
இப்படி குறிப்பிட்டுச் சொல்ல குறைகள் தென்பட்டாலும், காட்சிகள் சிலவற்றில் இருக்கிற உயிரோட்டம் படத்தை தாங்கிப் பிடிக்கிறது!
‘வான் மூன்று’ ஆகஸ்ட் 11; 2023-லிருந்து ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்க கிடைக்கிறது.