‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ சினிமா விமர்சனம்

‘ஒரு மார்க்கமான உறவை மார்க்கத்தை காரணமாக்கி சிதைத்து விடாதீர்கள்; அவர்கள் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழட்டும்’ என துணிச்சலாக கருத்து சொல்லியிருக்கும் படம்.

மதக் கட்டுப்பாடுமிக்க இஸ்லாமிய குடும்பத்துப் பெண் ஷகீரா. எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காமல் ‘என் வாழ்க்கை, என் விருப்பம்’ என சுதந்திரச் சிறகோடு சுற்றித் திரிபவர் வினோதா. அந்த இருவரும் வினோதமான தன் பாலின ஈர்ப்புக்கு (லெஸ்பியன்) ஆளாகிறார்கள்.

அகத்தைப் பரிமாறிக் கொண்டவர்கள் சந்தர்ப்பம் சாதகமாக அமைய சுகத்தையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

விவரமறிந்து ‘இதெல்லாம் நம் மார்க்கத்துக்கு எதிரானது’ என கொதித்துக் கொந்தளிக்கும் ஷகீராவின் தந்தையும் அவரது சுற்றமும் நட்பும் அந்த இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதே மிச்சசொச்ச கதை… இயக்கம் ஜெயராஜ் பழனி

இஸ்லாமியப் பெண்ணாக நிரஞ்சனா நெய்தியார். தன் வீட்டுக்கு வந்த பெண் மீது முதல் பார்வையிலேயே ஈர்ப்பு ஏற்படுவதை முகத்தில் பிரதிபலிப்பது, அவளுடன் கலந்து பழகுவதில் இன்பம் காண்பது, உடலோடு கலப்பதில் திருப்தி கொள்வது என காட்சிக்கு காட்சி நடிப்பில் நல்ல உயிரோட்டம். தன்னைக் காதலிப்பதாக கருதி சொல்லாலும் செயலாலும் உருகிக் கரைகிற இளைஞனிடம், தனக்கு இன்னொரு பெண் மீது உருவாகியிருக்கும் காதலை எடுத்துச் சொல்லுமிடம் அத்தனை உணர்வோட்டம்.

நடை உடையில் வஞ்சனையின்றி வெளிப்படும் உடற்கட்டின் வளைவு நெளிவுகள், உதடுகளின் செழுமை, விழிகளில் சுதந்திர மனோபாவம் என ஏற்றிருக்கும் வில்லங்கமான வேடத்திற்கு எல்லாவிதத்திலும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் வினோதாவாக வருகிற ஸ்ருதி பெரியசாமி.

நிரஞ்சனாவின் தந்தையாக வருபவர், மனதில் விபரீதமான ஆசை உருவான மகளை அடித்துத் துவைப்பது, உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வது என கதைக்குத் தேவையான பரபரப்பு கூட்டியிருக்கிறார்.

இஸ்லாமியப் பெண்ணை காதலிக்கும் இளைஞன் உள்ளிட்ட இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு பரவாயில்லை ரகம்.

சரியா தவறா என்ற விவாதத்தை உருவாக்கும் விதத்திலான கதைக்களம். இஸ்லாமியப் பெண்ணை கதையின் நாயகியாக்கியிருப்பதால் கூடுதலாய் சர்ச்சைகள் உருவாகலாம். எதுவானாலும், காலம் மாறுகிற சூழலில் தன்பாலின ஈர்ப்பு என்பது எல்லாவிதமான கலைப் படைப்புகளிலும் வெளிப்படத்தான் செய்யும்.

பல வருடங்கள் முன் நந்திதா தாஸ் நடிப்பில் இதேவகை படமொன்று வெளிவந்து ‘நெருப்பு’ மூட்டியது நினைவிருக்கலாம்.

நடிகை நீலிமா இசை இணைந்து தயாரித்திருக்கிற, 90 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிற இந்த படைப்பு ஷார்ட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 28; 2023 அன்று வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here