வித்தியாசமான கதைக்களம், வியக்கவைக்கும் உருவாக்கம் என வெளிவருகிற படைப்புகளின் வரிசையில் ‘வல்லவன் வகுத்ததடா.’
எந்த ஊரிலாவது போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் கொடுக்க வருவோரிடம் உண்டியல் வைத்து வசூல் செய்வதை பார்த்துள்ளீர்களா? இந்த படத்தில் பார்க்கலாம்.
‘அட, இது புதுசா இருக்கே’ என்று தோன்றுகிறதா?
இதென்ன பிரமாதம், இதை விட ஸ்பெஷல் ஐட்டமும் இருக்கிறது… அது, தன்னிடம் வட்டிக்கு கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாதவர்களின் உறுப்புகளை அகற்றி விற்று கல்லா கட்டும் வில்லன்.
இப்படி எக்குத் தப்பான, புதுவிதமான, பணத்துக்காக எதையும் செய்கிற ஐந்து பேர், நேர்மையின் பாதையில் பயணித்து சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாகி அவதிப்படுகிற ஒருவர் என ஆறு பேரை ஹைப்பர் லிங்கில் சுற்றிச் சுழல்கிறது திரைக்கதை.
பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டிய கதையை தன்னால் முடிந்த எளிமையான பொருட்செலவில் தயாரித்து, ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் விநாயக் துரை.
தன் அழகில் மயங்கிக் கிடக்கும் காதலனைப் பயண்படுத்தி பணத்தாசையை நிறைவேற்றிக் கொள்பவராக அனன்யா, நீதிமணி என்ற பெயரில் நீதி தவறி நடக்கும் இன்ஸ்பெக்டராக ராஜேஷ் பாலச்சந்திரன், தன் அழகில் மயங்கிக் கிடக்கும் காதலனைப் பயண்படுத்தி பணத்தாசையை நிறைவேற்றிக் கொள்பவராக அனன்யா, நீதிமணி என்ற பெயரில் நீதி தவறி நடக்கும் இன்ஸ்பெக்டராக ராஜேஷ் பாலச்சந்திரன், களவாணிக் கூட்டாளிகளாக தேஜ் சரண், ரெஜின் ரோஸ், உடல் உறுப்பு வியாபாரியாக விக்ரம் ஆதித்யா என ஐந்து பேரும் பணவெறி பிடித்து அலையும் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்க டாக்ஸி ஓட்டி வாழ்நாளை நகர்த்தும் சுவாதி மீனாட்சி பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஆறுபேருக்குள்ளும் தொடர்பு உருவாவது, அதனால் நடக்கிற சம்பவங்களின் அணிவகுப்பு கதையோட்டத்துக்கு சுவாரஸ்யம் தருகின்றன.
சகிஷ்னா சேவியரின் பின்னணி இசையும், கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவும் எளிமையான கதைக்களத்துக்கு கச்சிதமாக பொருந்த, ‘ஹைபர் லிங்க்’கில் அமைந்த காட்சிகளை குழப்பமில்லாமல் தொகுத்திருக்கிறார் அஜய்.
நிஜத்தில் கேடுகெட்டவர்களே சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகில், நல்லவனுக்கு என்றாவது ஒருநாள் நல்லது நடந்தே தீரும் என எடுத்துச் சொல்லியிருப்பது, கஷ்ட நஷ்டங்களோடு மட்டுமே வாழ்நாளைக் கழிக்கிற நல்லவர்களின் மனதுக்கு ஆறுதல் தருகிற சங்கதி.
வல்லவன் வகுத்ததடா, ஒரு முறை பார்க்கலாம்டா!