நம் நாட்டின் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் அருமை பெருமைகளை மையப்படுத்தி வந்துகொண்டிருக்கிற படங்களின் வரிசையில் ‘வலு‘வான புதுவரவு.
உரிய அனுமதி பெற்று அந்த அடர்ந்த காட்டுக்குள் இரண்டு இளம்பெண்கள் மூலிகை ஆராய்ச்சி செய்வதற்காக செல்கிறார்கள். உள்ளூரிலிருந்து வாய்ச் சவடால் இளைஞன் ஒருவனை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.
காட்டுக்குள் நுழையும் அவர்களுக்கு விலங்குகளால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை. இன்னொரு பக்கம் அதே காட்டுக்குள் குடித்துவிட்டு திரியும் முரட்டு ஆசாமிகள் சிலர் அந்த பெண்களை காமப்பசியோடு துரத்துகிறார்கள். அதே காட்டுக்குள் ஏதோவொரு கடவுளுக்கு பூஜை செய்துகொண்டிருக்கும் சாமியார்கள் சிலர் அந்த பெண்களை சுற்றி வளைத்துப் பிடித்து அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இளைஞனை (நர)பலியிட முயற்சிக்கிறார்கள். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சூழ்கிற ஆபத்துகளை சமாளித்து பயணத்தை தொடரும்போது திடீரென இரண்டு பெண்களில் ஒருவர் காணாமல் போகிறார். கதை சூடுபிடிக்கிறது…
அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக காட்டிலாக்கா அதிகாரி ஒருவர், புதுவிதமான இசையை சேகரிப்பதற்காக சாதுவான தோற்றத்தில் இன்னொருவர் என இன்னும் சிலரையும் காட்டுக்குள் பார்க்க முடிகிறது. கதையோட்டத்தின் முன்பாதி இப்படி நகர,
அந்த பெண் காணாமல் போனதன் காரணம் என்ன? காணாமல் போன அவளுக்கு என்ன நேர்ந்தது? அந்த இரு பெண்களின் மூலிகை ஆராய்ச்சி என்னவானது? காட்டுக்குள்ளிருக்கும் மனிதர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக படத்தின் பின்பாதி திரைக்கதை பரபரக்கிறது… இயக்கம் ராஜா பார்த்திபன்
நாயகி சிவசந்தியா லட்சணமாக இருக்கிறார். தேவைக்கேற்ப நடித்திருக்கிறார். குறிப்பாக தம்பியை இழந்த சோகத்தை பிரதிபலிக்கும் காட்சி, சாட்சி.
மற்றொரு நாயகி இசைலதாவின் மாநிற தேகத்தில் ஒரு மார்க்கமாய் குலுங்கித் ததும்புகிற இளமையும், தெற்றுப்பல் சிரிப்பும், லேசான வில்லத்தனமும் ஈர்க்கிறது.
காட்டிலாக்கா அதிகாரியாக வருகிறவரின் செயல்பாடுகளை வைத்து அவர்தான் வில்லன் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நிறைவுக் காட்சி அவரது வெறொரு அவதாரத்தைக் காட்டி திருப்புமுனைக்கு உதவுகிறது. அவரது ஆக்ரோஷமான நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நம்மூரின் காடு மலைகளில் காணப்படும் அபூர்வ மூலிகைகளைக் கொண்டு மனிதகுலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த, நோயே வராமல் தடுக்க மருந்து மாத்திரைகளை உருவாக்குகிற ஆராய்ச்சியாளராக வருகிறவரின் ஆதங்கமும், கோபமும் கச்சிதம்.
பயம் வெளியில் தெரியாமல் கெத்து காட்டுகிற இளைஞனின் வெகுளித்தனம் ரசிக்க வைக்கிறது. ஸ்மார்ட் போனை பயன்படுத்தத் தெரியாமல் தவிக்கும் காட்சி கவர்கிறது.
கதைக்களத்தின் 90 சதவிகிதத்தை காடு மட்டுமே எடுத்துக் கொள்ள அந்த காட்டின் அழகை இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில் (அவைலபிள் லைட்டிங்) படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஹீம்பாபு.
சாய் இசையில் ‘கானகத்தில் வண்ண மயில் ரெண்டு, கூட ஒரு குரங்குப் பையன்’ பாடலின் வரிகள் கதையோடு ஒட்டி உரசி உற்சாகமூட்டுகிறது. அந்த உற்சாகம், ‘இந்த பக்கம் ஆஷா, அந்த பக்கம் ரோசா, நடுவுல ராசா’ பாடலிலும் நீள்கிறது.
காட்சிகளைப் படமாக்கியதில் இருக்கும் நாடகத்தனம் இடையிடையே சலிப்பு தந்தாலும்… புதுமுகங்களை வைத்து, எளிய பட்ஜெட்டில் சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை அவசியம் என்பதை, நம் உடம்பிலிரும்ந்து அந்த சக்தி எப்படியெல்லாம் களவாடப்படுகிறது என்பதை, நம்மூர் மூலிகைகளின் பலன்களை அபகரிக்கும் வெளிநாடுகளின் சூழ்ச்சியை ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல முயற்சித்திருப்பதற்காக படகுழுவுக்கு ஸ்பெஷல் பாராட்டு!