தளபதி விஜய் தமிழில் நடித்திருக்கும் தெலுங்குப் படம். முதல் பத்து நிமிடக் காட்சியிலேயே அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என வரிவரியாய் சொல்லிவிட முடிகிற திரைக்கதையோட்டத்தில் ‘வாரிசு.’
நாட்டிலேயே பெரிய தொழிலதிபரான சரத்குமார் மூன்று பிள்ளைகளுக்கு அப்பா. மூத்த பிள்ளைகள் இருவர் அப்பாவின் பிஸினஸில் ஈடுபாடு காட்ட, கடைக்குட்டி விஜய் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறார். அதனால் அப்பாவின் எதிர்ப்பைச் சம்’பாதிக்கிறார்.’ வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
ஏழு ஆண்டுகள் கடந்துபோக அப்பாவுக்கு உடல்நலம் குன்ற, பிஸினஸை கவனித்துக் கொள்ளும் இரண்டு பிள்ளைகளுக்குள் போட்டி பொறாமை உருவாக, பிஸினஸ் எதிரியின் கை ஓங்க, பல்லாயிரம் கோடி பிஸினஸ் பாதாளத்தில் விழுகிற சூழ்நிலை என ஏகப்பட்ட ஏழரைகள்!
அந்த நேரமாகப் பார்த்து பிஸினஸ் வாரிசாக பொறுப்பேற்கிறார் விஜய். அதன்பிறகு அவர் சந்திக்கும் சிக்கல்களும் அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதும் அடிதடி அதிரடி ஸ்கிரீன்பிளே… இயக்கம்: வம்சி பைடிபள்ளி
‘தளபதி’ விஜய் வழக்கத்தை விட படு ஸ்மார்ட். பிஸினஸ் எதிரியை வீழ்த்த அவர் அமைக்கும் வியூகங்கள் பரபரப்பு பற்ற வைக்க, ஆக்சன் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. படம் நெடுக நீள்கிற அவரது உடலசைவுகள், கோணங்கிச் சேட்டைகள் கலகலப்புக்கு கேரண்டி! மனிதர் நடனக் காட்சிகளில் தெறிக்கவிடுகிறார்!
ஜாஸ்மின் மலர்ந்ததுபோல் மனம்திறந்து சிரிக்கிற ராஷ்மிகாவை அவ்வப்போது காட்டுகிறார்கள். அவர் ‘ரஞ்சிதமே’ பாட்டில் தன்னால் முடிந்ததை HOTடுகிறார்!
பிஸினஸ் தவிர வேறெந்த சிந்தனையுமில்லாத கார்ப்பரேட் பிஸினஸ் மேனாக சரத்குமார் கச்சிதமான தேர்வு. நடிப்பு பங்களிப்பு நிறைவு.
நெகிழ வைக்கிறார் விஜய்க்கு அம்மாவாக வருகிற ஜெயசுதா!
பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் வழக்கம்போல் கெத்து!
அப்படி வந்துவிட்டு இப்படி போகிற கதாபாத்திரம்தான். ஆனாலும், தனது சுறுசுறு நடிப்பால் கவனிக்க வைக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
யோகிபாபு, விடிவி கணேஷுக்கான காமெடி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம்!
விஜய்யின் அண்ணன்களாக ஸ்ரீகாந்த், ஷாம், அண்ணிகளாக சங்கீதா, சம்யூக்தா இன்னபிற பாத்திரங்களில் இளைய திலகம் பிரபு, மைம் கோபி உள்ளிட்டோரின் நடிப்பு கதையோட்டத்துக்கு பலம்!
தமன் இசையில் ‘ரஞ்சிதமே’ பாடலில் டன்டன்னாய் எனர்ஜி. ரசிகர்களின் விசிலால் தியேட்டர் அதிர்கிறது!
அரதப்பழசான கதையோட்டத்தில் பயணிக்கும் இந்த படத்தில் பிரமிப்பு தருகிற விஷயம் சில காட்சிகளின் பிரமாண்டம்!
பிஸினஸ் பேச்சு வார்த்தை, சேர்மன் எலக்சன் என்றெல்லாம் நீ….ளும் காட்சிகள் சலிப்பு!
குறைகளில்லாத படம் எது? இருந்துவிட்டுப் போகட்டும். குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த படம் என்ற வகையிலும், விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அம்சங்களுக்கு குறைவில்லை என்ற வகையிலும் வாரிசு – பொங்கல் நேரத்தில் ‘தீபாவளி!’