ஆணவக் கொலைகளைப் பற்றிய படங்களின் வரிசையில் தனித்துவமான கண்ணோட்டத்தில் ‘வர்ணாஸ்ரமம்.’
தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக் கொலைகளைப் பற்றி ஆவணப் படம் எடுக்கும் நோக்கத்தில் நம்மூருக்கு வருகிறார் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர்.
வந்தவர், தங்கையை ஆணவக் கொலை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் அந்த கொலையைச் செய்தது தான் அல்ல என்பதையும் கொலை செய்தவர்களைப் பற்றியும் தான் குற்றவாளியானதன் காரணத்தையும் சொல்கிறார்.
பிளாஷ்பேக் காட்சிகள் விரிய, சம்பந்தப்பட்ட கொலை எப்படி நடந்தது என்பதும் அதற்கான காரணமும் விவரிக்கப்பட உயிருக்குள் நடுக்கம் தொற்றுகிறது…
முடிந்துபோன வழக்கை தூசுதட்டி உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட அந்த ஆவணப்பட முயற்சி வழியமைத்துத் தருவதாக கதையை நகர்த்தி திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் சுகுமார் அழகர்சாமி
அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளிப் பெண்ணான சிந்தியா லெளர்டே, ஆவணப் படம் எடுக்கும் பத்திரிகையாளராக வருகிறார். நம்மூரில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வை, மனித மனங்களின் கொடூரத்தைக் கண்டு உள்ளம் குமுறும் காட்சிகளில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தனக்கு விருந்து உபசரிப்பு செய்கிற பிராமண வீட்டில் சாதி காரணமாக தனது ஆட்டோ டிரைவர் நுழைய முடியாத நிலையில் விருந்தை புறக்கணித்து எழுந்து போகும் காட்சி நச்! இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே.தான் ஓட்டும் ஆட்டோவில் புரட்சி பேசும் புத்தகங்களை வைத்துக் கொண்டு, கம்யூனிஸக் கொள்கைப் பிடிப்போடு அமைதியாக வலம் வருகிற ராமகிருஷ்ணன், பிளாஷ்பேக் காட்சிகளில் மற்றொரு கெட்டப்பில் சாதி வெறியனாக மிரட்டுகிறார்.
தங்கையின் காதலுக்காக தனது சாதிப்பற்றை விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அதற்கு பலனின்றி தங்கை கொல்லப்பட அதிர்ச்சியில் உறைந்துபோகும் காட்சிகளில் கெத்தான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் புதுமுகம் முத்து! அவரது தங்கைக்கு நேரும் கொடூரம் உச்சகட்ட குரூரம்!
‘கவிதாலயா’ மோகன், பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, ஏ.பி.ரத்னவேல் என மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறவர்களின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு!
‘விருப்பமில்லாம விருந்து வைக்கிறது விஷம் வைக்கிறதுக்கு சமம்.’ வசனங்கள் ஆங்காங்கே நறுக் சுறுக்!
சடலத்தை எரியூட்டுமிடத்தில் வீர ஜாம்புவானும் சிவனும் பேசிக் கொள்வது போன்ற சற்றே நீண்ட வசனம் ஏராளமான செய்திகளைச் சொல்கிறது. அந்த காட்சிக்காக நிறைய தேடியிருக்க வேண்டும்; உழைத்திருக்க வேண்டும்.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் ‘நேத்து இருந்தான் இன்னைக்கு செத்தான்’ பறையிசைப் பாடல் கவனம் ஈர்க்கிறது.
ஆணவக் கொலைகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், ‘உன் பொண்ணை எந்த சாதிக்காரனுக்கு வேண்டுமானாலும் கட்டிக் கொடு; ஆனா, அவளுக்கு பிறக்கிற குழந்தை நம்ம சாதியா இருக்கணும்‘ என்ற கோணத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டத்தை அதன் வீரியம் குறையாமல் துணிச்சலாக பதிவு செய்திருப்பது வர்ணாஸ்ரமத்தின் தனித்துவம்!