எந்நேரமும் வேலை வேலை என மனதையும் மூளையையும் அளவுக்கதிகமாக சிரமப்படுத்தி தூக்கத்தையும் தொலைப்பவர்களின் கசந்த வாழ்க்கையை மனதில் வைத்து உருவான ‘வசந்த முல்லை.’
சிம்ஹா ஐ.டி. பணியிலிருக்கும் இளைஞர். குறிப்பிட்ட ஒரு புராஜெக்டில் மூழ்கியிருப்பவர் அந்த வேலைப்பளுவிலிருந்து விடுபட மனைவியுடன் வெளியூர் செல்கிறார். சென்ற இடத்தில் ‘வசந்த முல்லை’ என்ற ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கு ஆணா பெண்ணா என தெரியாதபடி முகம் மறைத்த மனித உருவம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு துரத்துகிறது; கொடூரமாய் தாக்குகிறது.
அந்த துரத்தலுக்கு காரணம் என்ன? தாக்குதலின் பின்னணி என்ன? இப்படி பரபரவென மனதில் எழும் கேள்விகளுக்கு சற்றே விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் ரமணன் புருஷோத்தமா.
பணிச்சுமையால் ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் மனதளவிலான நெருக்கடியை, உளவியல் சிக்கல்களை முகபாவங்களில் பிரதிபலிப்பதாகட்டும், செய்யாத குற்றத்தை செய்ததாக கருதி குற்றவுணர்ச்சியை சுமக்கும்போதாகட்டும், மர்ம மனிதனைப் பார்த்துப் பயப்படுவதாகட்டும், அந்த மனிதனை ஆக்ரோஷமாக தாக்குவதாகட்டும் சிம்ஹாவிடமிருந்து கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான நடிப்பு!
சிம்ஹாவின் ஜோடியாக காஷ்மிரா பர்தேசி. விழிகளில் பயத்தைக் காட்டுவதும், கணவனை தூங்க வைக்க முத்த ஒத்தடம் தருவதுமாக நடிப்புப் பங்களிப்பில் கச்சிதம்.
107 நிமிடங்கள் ஓடுகிற ஒட்டுமொத்த படத்திலும் மிகச்சில நடிகர், நடிகைகளே நடித்திருக்க ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார் ஆர்யா.
காட்சிகளின் பரபரப்புக்கு விறுவிறுப்பூட்டுகிற ராஜேஷ் முருகேஷனின் பின்னணி இசை, திரில் காட்சிகளுக்கு திகில் முலாம் பூசுகிற அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலம்!
மிரட்டலான சில காட்சிகள் இது பேய்ப்படமா, டைம் லூப் கதையா என யோசிக்க வைப்பதும், கிளைமாக்ஸில் வேறு கோணத்தில் திரைக்கதையை நகர்த்தியிருப்பதும் இயக்குநரின் புத்திசாலித்தனம்.
சிலபல குறைகள் இருந்தாலும் நேரங்காலம் பார்க்காமல் வேலையில் மூழ்கி தூக்கத்தை தொலைத்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வோருக்கு எச்சரிக்கை மணியடித்ததற்காக வசந்த முல்லைக்கு கொடுக்கலாம் வரவேற்பு பூங்கொத்து!