‘யாருய்யா நீங்கள்லாம்? எங்கிருந்துய்யா வர்றீங்க?’ என ‘லவ்லி’ படத்தில் விவேக் கேட்பதுபோல், சமீபமாக வருகிற படங்களின் இயக்குநர்களைப் பார்த்து ஆச்சரியமாய் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு படு வித்தியாசமான கதைகளை புதிய இயக்குநர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
படத்தில் வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் இருக்கிறதோ இல்லையோ, சுவாரஸ்யமான சில சங்கதிகள், உணவில் வைக்கிற ஊறுகாய் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சம் இருப்பதுண்டு. அதேபோல், ஆர் ஜி கே இயக்கியிருக்கிற இந்த ‘வாஸ்கோடகாமா’வில் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே தொற்றிக் கொண்டிருக்கிறது!
தன் மகளுக்கு எல்லாவித கெட்டப் பழக்கங்களும் கொண்ட பொறுக்கியை, ரவுடியை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார் ஒரு பெரிய(?!) மனிதர். அவரது மகள் அப்படியொருவனை விரும்ப, கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்படுகிறது. கதையின் ஆரம்பமே ‘அடடே’ என்றிருக்க, அவளால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நல்லவன்; ஒரு தவறும் செய்யாதவன்; செய்யவும் துணியாதவன் என்பதெல்லாம் அவளுக்கும் அவளது அப்பாவுக்கும், திருமணம் நடக்கவிருக்கும் தருணத்தில் தெரியவர அதன்பிறகு என்ன நடந்தது, ஏது நடந்தது என்பதே கதையோட்டம்…
நகுல் திருதிருவென விழிப்பதும் சந்தர்ப்பத்துக்கேற்ப முகபாவத்தை மாற்றுவதுமாக தன் பங்களிப்பை கதைக்கேற்ப கச்சிதமாக தந்திருக்க, நாயகி அர்த்தனா பினுவின் ஹோம்லி லுக்கும் துடிப்பான நடிப்பும் கவர்கிறது.
ஆனந்த்ராஜை பார்த்தாலே சிரிப்பு பற்றிக் கொள்வது சகஜமாகிவிட்ட நிலையில் இந்தப் படத்திலும் அவர் வருகிற காட்சிகள் அனைத்திலும் இதழ்கள் திறந்துகொள்ள இனிதே நிகழ்கிறது புன்னகைப் பிரசவம்.
காமெடி களேபரத்துக்கு பேர்போன முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பிஜிலி ரமேஷ் என வரிசைகட்டும் நடிகர் நடிகைகள் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்க கே எஸ் ரவிக்குமார், மன்சூர் அலிகான், வம்சி கிருஷ்ணா, பிரேம், டி எம் கார்த்திக் என இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.
அருண் என் வி பின்னணி இசையில் அதிர்வு அதிகம். பாடல்களில் இதமிருக்கிறது. ஒளிப்பதிவு நேர்த்தி.
ஏன் சிரிக்கிறோம், எதற்காக சிரிக்கிறோம் என தெரியாமலே சிரிக்க வைக்கிற, இதற்கெல்லாம் சிரிக்க வேண்டுமா என நினைக்க வைக்கிற காட்சிகள் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியெனில் கதை, திரைக்கதை என எதிலும் தெளிவில்லாத இந்த படம் உங்களை கண்டிப்பாக கவரும்.
மற்றவர்கள் நகுலுக்கு ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என சொல்லிவிட்டு கடந்து போகலாம்.
-சு.கணேஷ்குமார்