‘வட்டார வழக்கு’ சினிமா விமர்சனம்

நிஜமாகவே கிராமத்து மண்வாசனையுடன், எளிமையான கதையோட்டத்தில், மிகமிக எளிமையான பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பு ‘வட்டார வழக்கு.’

1980 காலகட்டத்தில் நிகழும் கதை. கதைக்களம் மதுரை மாவட்டம் தொட்டனேரி கிராமம். அந்த கிராமத்தில் இரு குடும்பங்களுக்கிடையில் தொட்டும் தொடரும் வெட்டுக்குத்து பாரம்பரியம் பல உயிர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஒருவர் இன்னொருவரை தாக்க பெரிதாய் காரணங்கள் தேவைப்படுவதில்லை. சின்னச் சின்ன காரணங்களுக்காகவும் அடித்துக் கொள்கிறார்கள்; கொல்கிறார்கள்.

இப்படி படு சீரியஸாய் அடிதடி, வெட்டுக்குத்து என கடந்தோடும் கதையால் படம் பார்ப்பவர்கள் சோர்ந்து போகாமலிருக்க ஒடு காதல் ஜோடியும் சேர்ந்துகொள்ள பற்றிக் கொள்கிறது பரபரப்பு… இப்படியான கதையின் முடிவு எப்படியிருக்குமோ அதற்கு விதிவிலக்கில்லாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.

முறுக்கு மீசை முகத்துக்கு கம்பீரம் கொடுக்க, அகல விரியும் விழிகள் சற்றே பயம்காட்ட திடுதிப்பென எதிராளி மீது சீறிப் பாய்வது, கத்தியால் கீறிப்போடுவது என தன்னை நம்பிக் கொடுத்த சண்டியர் பாத்திரத்திற்கு சரியானபடி உயிரூட்டியிருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். ஆத்திரத்தில் ஆக்ரோஷத்தை கொப்பளிக்கும் அந்த விழிகள், மனதுக்குப் பிடித்தமானவளைக் கண்டதும் அடக்கி வாசிப்பதும், மிதப்புச் சிரிப்பும் ஈர்க்கிறது.

கதைநாயகி ரவீனா ரவியின் குண்டு முகத்தில் வெட்கச் சிரிப்பு, இதமான முறைப்பு, பதற்றம், பரிதவிப்பு, இழப்பின் துடிப்பு என கதாபாத்திரத்துக்கு தேவையான அத்தனை உணர்வுகளும் திரண்டு நின்று தேவைக்கேற்ப அட்டனன்ஸ் போடுகின்றன.

பல படங்களில் வில்லனாக கிட்டத்டட்ட ஒரே மாதிரியான நடிப்புப் பங்களிப்பில் பார்த்துப் பழகிய விஜய் சத்யாவுக்கு இதில் மாறுபட்ட தோற்றத்தில் அமைந்த வில்லன் வேடம். வேட்டியை தவறவிட்டு கோவணத்துடன் பாய்ந்தோடுவதிலிருந்து கடுங்கோபக்கார ஆசாமியாக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களை, கதை நடக்கும் மண்ணில் வசிப்பவர்களையே ஏற்கச் செய்திருப்பது,

மதுரை வட்டார பேச்சிலிருக்கும் கிண்டல், கேலியை நடிகர், நடிகைகளின் வசனங்களில் நேர்த்தியாய் புகுத்தியிருப்பது, அதை அவர்கள் பேசும் விதம் அத்தனை இயல்பாய் இருப்பது, அதில் ஆங்காங்கே வெடித்துச் சிரிக்கும்படியான சங்கதிகள் பின்னிப் பிணைந்திருப்பது கதையின் நகர்வுக்கு பெரியளவில் பலம் சேர்த்திருக்கிறது.

‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் பாடல்கள் லேசாக மனதை வருட, காட்சிகளின் தன்மைக்கேற்றபடி அவ்வப்போது பின்னணியில் ஒலிக்கும் அவரது இசையிலமைந்த பழைய பாடல்கள் இதயத்துக்கு இதம் சேர்க்கின்றன. பின்னணி இசை விறுவிறுப்பான காட்சிகளுக்கு போதியளவு வீரியம் ஏற்றியிருக்கிறது.

80 காலகட்டத்தை காட்சிகளில் கொண்டுவர கிடா சண்டை, ரேக்ளா ரேஸ், நாகரிகம் தொற்றாத வீடுகள், திருவிழா என பலவற்றையும் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிற கலை இயக்குநரை தனியாக பாராட்ட வேண்டும்.

பெரிதாய் இயற்கை செழிப்பில்லாத கதை நிகழ்விடங்களை அதன் தன்மை மாறாமல் படமாக்கி, காட்சிகளை வளமாக்கியிருக்கிறது ஒளிப்பதிவாளரின் கேமரா!

குறை சொல்ல சிலபல அம்சங்கள் இருந்தாலும், பெரிதாய் சினிமாத்தனமில்லாத எளிமையான யதார்த்தப் படைப்பை தந்திருக்கிற கண்ணுச்சாமி ராமச்சந்திரனின் திறனை பாரபட்சமின்றி பாராட்டலாம்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here