‘வெள்ளிமலை’ சினிமா விமர்சனம்

மக்களுக்கு அள்ளித்தர வேண்டிய நாட்டு வைத்தியத்தின் அருமை பெருமைகளை கிள்ளித் தரும் முயற்சியாக வெள்ளிமலை!

மேகம் தொட்டுத் தவழும் மலை, திரும்பிய பக்கமெல்லாம் விழிகளை நிறைக்கும் பசுமை என இயற்கையின் செல்லப் பிள்ளை போலிருக்கிறது அந்த வெள்ளிமலை கிராமம்.

அந்த கிராமத்தில் நாட்டு வைத்தியர் இருந்தும் அவரை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, மக்கள் தங்கள் உடல்நல கோளாறுகளுக்கு ஆங்கில மருத்துவத்தை தேடி வெளியூருக்கு போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ‘செத்தாலும் பரவாயில்லை; உன்னிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள மாட்டோம்’ என பிடிவாதமாக இருக்கிறார்கள். அந்த பிடிவாத்தால் சில உயிர்களும் பறிபோகின்றன.

இந்த நிலையில் ஊர் முழுக்க விநோத நோயொன்று பரவுகிறது. மக்கள் மயங்கி விழுந்து செத்து மடிகிறார்கள். அச்சமடையும் அவர்கள் வேறு வழியின்றி உள்ளூர் வைத்தியரிடம் தஞ்சமடைகிறார்கள்.

கதையின் போக்கு இப்படியிருக்க, அடுத்து என்ன நடக்கும்? என உங்களிடம் கேட்டால், ‘அந்த வைத்தியர் தன் மருத்துவத்தால் அவர்களை குணப்படுத்தி நாட்டு வைத்தியத்தின் அருமை பெருமையை உலகறியச் செய்வார்’ என்றுதானே சொல்வீர்கள். அப்படிப்பட்ட வழக்கமான பாதையில் பயணிக்காமல் திரைக்கதையில் வித்தியாசம் காட்டியிருப்பது ‘வெள்ளிமலை’யின் தனித்துவம்.

வைத்தியரை மக்கள் புறக்கணிப்பது ஏன், பரவிய நோயை குணப்படுத்த அவர் என்ன செய்கிறார், அதன் பலன் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. இயக்கம் ஓம் விஜய்

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி வேடங்களிலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட ‘சூப்பர் குட்’ சுப்ரமணி இந்த படத்தின் கதைநாயகன்!தன்னிடம் மருந்துகள் இருந்தும் அதை மக்கள் ஏற்காத நிலையில் ஆதங்கத்தில் குமுறுவது, தன் மருத்துவத்தை புறக்கணித்து தன் கண்ணெதிரிலேயே உயிர்பலி நடக்கும்போது மனம் நொறுங்குவது, தடைகளைக் கடந்து தன்னை நாடிவந்த ஒருவருக்கு இறையருளை வேண்டி ஈடுபாட்டுடன் வைத்தியம் பார்ப்பது, மூலிகைகளை தேடிக் கண்டடைய ஊர் மக்களை கூட்டிச் சென்று அதை செய்ய முடியாமல் குற்றவுணர்ச்சியில் கலங்குவது என படம் முழுக்க சுப்ரமணியின் நடிப்பில் நிறைந்திருக்கிறது உணர்வுகளின் உயிரோட்டம்! மனிதர் ஒருசில காட்சிகளில் மாறுபட்ட இன்னொரு வேடத்திலும் வந்துபோகிறார்.கதைநாயகனை தவிர அத்தனைப் பேரும் புதுமுகங்கள்… அவர்களில் ஒருவராக வைத்தியரின் மகளாக அஞ்சு கிருஷ்ணா. அவரது தோற்றப்பொலிவில் மலை கிராமத்துப் பெண்ணுக்கான அத்தனை அம்சங்களும், நடிப்பில் ஏற்ற பாத்திரத்துக்கான பொருத்தமும் இருக்கிறது! அந்த வெள்ளந்திச் சிரிப்புக்கு தனி மார்க்!

பயில்வானாக வருகிறவர் வைத்தியரை வெறுப்பேற்றுவது கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.வீர சுபாஷ், கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பில் குறையில்லை.

சித்தர்களின் நினைவாக கதைநாயகனுக்கு அகத்தீசன், போகர் எனவும் மற்ற முக்கிய பாத்திரங்களை ஏற்றிருப்பவர்களுக்கு வனராஜா, மொரட்டாள், புயல்ராசு, காட்டுத் தீ எனவும் பெயரிட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது!

என். ஆர். ரகுநந்தன் இசையில் ‘வந்தாரய்யா வந்தாரய்யா போகர்’ பாடலில் உற்சாகம் வழிகிறது!

ஓங்கி உயர்ந்து பரந்து விரிந்த மலையின் அழகை துளியும் சிதறாமல் விழுங்கி விருந்து படைத்திருக்கிற மணிபெருமாளின் கேமரா கண்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு!

கதையோட்டத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் நம்மூர் வைத்தியத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன்வந்த இயக்குநரின் முயற்சியை வரவேற்பதே நியாயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here