‘விருமன்’ சினிமா விமர்சனம்
மண்மணம் மாறா கதைக்களத்தில் வீறுகொண்ட சிங்கமாய், சிறுத்தையாய், கொம்பனாய் ‘விருமன்.’
தன் அம்மாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த தன் கேடுகெட்ட அப்பாவை வெட்டிப் போடும் வெறியோடிருக்கிறான் விருமன். அந்த சின்னப் பையனின் சீற்றத்தை அடக்கி தன்னுடன் கூட்டிச் சென்று வளர்த்து சிங்கமாக்குகிறார் தாய்மாமன். வளர்ந்து வாலிபப் பருவம் தொட்ட பிறகும் அப்பாவின் மீதான விருமனின் பழிதீர்க்கும் எண்ணம் விட்டபாடில்லை.
தனக்கு எதிரியாய் வளர்ந்து நிற்கும் மகன் விருமனை வேரறுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுத் துணியும் அந்த அப்பாவின் அக்கிரமங்கள் – அவரோடு மல்லுக்கட்டும் விருமனின் வீரதீர பராக்கிரமங்கள் என நீளும் அடுத்தடுத்த காட்சிகள் அத்தனையும் பரபரப்பு, விறுவிறுப்பு!
நம்மூர் மக்களில் கழிசடை குணம் கொண்டோரையும் அவர்களிடையே வாழும் உன்னத மனிதர்களையும் அடையாளம் காட்டும் விதமாக மட்டுமே விருமனை உருவாக்கி, தன் மீதான சாதிப்படம் எடுப்பவர் என்ற முத்திரையை உடைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா!
கிராமத்து இளைஞன், ஆத்திர ஆவேசக்காரன், அடிதடியில் வீரன் என்றாலும் நிதானமிழக்காதவன், காதலில் கண்ணியம் கடக்காதவன், மனிதாபிமானம் தொலைக்காத மனிதன் என கலந்துகட்டிய காம்போவாக கார்த்தி. மனிதர் பாசக் காட்சிகளில் பனிமலை; சண்டைக் காட்சிகளில் எரிமலை என சிலிர்க்க வைக்கிறார். காதல் காட்சிகளில் கார்த்தியின் அசடு வழியல் ஆஹா!
கதைநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு புதுவரவு. கிராமத்துப் பெண் பாத்திரத்திற்கு அதிதி அதீத பொருத்தம். தன்னை காதலோடு தொடர்ந்துகொண்டிருக்கும் விருமனை திரும்பிப் பார்க்காத அதிதி நன்றிக்கடனுக்காக அவனை விரும்பிப் பார்ப்பது ஈர்ப்பு. பாடல்களில் அவரது குத்தாட்டம் குதூகலம்! திறமை, அழகு, இளமை திரண்டிருக்கும் அவருக்கு முத்தக் காட்சி இரண்டிருக்கிறது!
பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பல படங்களில் பார்த்தது. மகனுக்கு எதிராக செயல்படுவது ஒருபக்கமிருக்க, விஷம் குடித்த தன் தங்கையை காப்பாற்ற தூக்கிக் கொண்டு ஓடும் அவர் போய் நிற்குமிடம், அங்கு நடக்கும் சம்பவம் பிரகாஷ் ராஜ்யம்!
தன் தங்கை மகன் விருமனுக்கு வீரம் ஊட்டி வளர்த்தெடுக்கும் தாய்மாமனாக ராஜ்கிரண். அவரது தேர்ந்த நடிப்பு கதைக்கு சரிவிகித பங்களிப்பு: சண்டைக் காட்சியில் வெளிப்படும் புயல்வேகம் புல்லரிப்பு!
வில்லி வேடம் கொடுத்தால் கில்லியாக களமிறங்குபவர் வடிவுக்கரசி. விருமனிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
கார்த்தியின் அண்ணன்களாக வசுமித்ர, மனோஜ், ராஜ்குமார், அவர்களின் இல்லத்தரசிகளாக அருந்ததி, மைனா நந்தினி… சரண்யா பொன்வண்ணன், ஓஏகே சுந்தர், ஆர்.கே. சுரேஷ், வையாபுரி… நான்கு பக்கம் எழுதினாலும் தீராது எனும்படி திரையில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாய் நன்கு நடிக்கும் நடிகர் நடிகைகள்!
காமெடிப் பங்களிப்பும் சரி, சற்றே ஊனமான கால்களைக் கொண்டு பாய்ந்து பாய்ந்து நடப்பதும் சரி, அத்தனை கூட்டத்திலும் தனித்துத் தெரிகிறார் சூரி!
பிரகாஷ்ராஜின் அல்லக்கையாக வரும் சிங்கம் புலி அவ்வப்போது அடிக்கும் ‘பஞ்ச்’சும் ரசிக்க வைக்கிறது.
‘எதிர்பார்த்து வாழறவன் ஆம்பளை இல்ல. எதிர்த்து வாழறவந்தான் ஆம்பளை’, ‘பெண் என்றால் பூமாதேவியா இருக்கணும்; பூலான் தேவியா இருக்கக் கூடாது’ வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
யுவனின் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்புக்கு விறுவிறுப்பு கூட்ட, ‘கஞ்சாப் பூ’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது!
வானில் பறப்பது, தரையில் தவள்வது என ஒளிப்பதிவாளரின் கேமராவுக்கு ஓயாத வேலை. ஒழுங்கு தவறாமல் செய்திருக்கிறார்.
நிறைவாக சிலவரிகள்… நம்மூர் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் சார்ந்த, பந்தபாசம் சார்ந்த, பகை பழிவாங்கல் மனோபாவம் சார்ந்த, பாரம்பரிய கலை கலாச்சாரம் சார்ந்த படங்களின் வரவு குறைந்து வரும் சூழலில் விருமன் போன்ற படங்கள் ஆறுதல் வரவு! அதற்காகவே இப்படியான படங்களை வரவேற்கலாம்: இப்படியான படங்கள் எடுப்போரை கொண்டாடலாம்!