திரைப்படங்களில் பரபரப்பைக் கூட்டும் நோக்கத்தில் ‘லாஜிக் பார்க்காத மேஜிக்’காக சிலபல காட்சிகளை வைப்பது வழக்கம். இந்த படத்தில் கதைநாயகனை மேஜிக் கலைஞனாக்கி வித்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கி.
நாயகன் சதீஷ் தங்கம், வைரம் என பெரியளவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் தனது புத்திசாலித்தனத்தை காட்டுகிறார்; மேஜிக் திறமைமையை புகுத்துகிறார். சில தாதாக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.
மேஜிக் கலைஞரான அவர் கொள்ளையடிக்க முயற்சிப்பதன் காரணம் என்ன? அந்த முயற்சியில் அவரது திட்டங்கள் நினைத்தபடி நிறைவேறுகிறதா? கூட்டு சேர்த்துக் கொண்ட தாதாக்கள் யார்? அவர்களை தேர்ந்தெடுத்த நோக்கம் என்ன? இப்படியான கேள்விகளுக்கு பதில்கள் திரைக்கதையில்…
நாயகனாக சதீஷ். ஏடிஎம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பணத்தை சாதுர்யமாக கொள்ளையடிப்பது, மூன்று பெரிய தாதாக்களை அணுகி அவர்களை ஒரே களத்துக்குள் கொண்டு வருவது, பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஏர்போர்ட்டின் சேப்ஃடி லாக்கருக்குள் நுழைந்து வைரத்தை கைவசப்படுத்துவது, எதிரிகளை சந்தர்ப்பம் அமைத்து சிக்க வைப்பது என தனக்கான காட்சிகளில் காமெடி பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு இயல்பான நடிப்பை இறக்கி வைத்துள்ளார். இன்ட்ரோ சாங்கில் ஈடுபாட்டுடன் உற்சாக ஆட்டமும் போட்டிருக்கிறார்.
மாரி, டாலர் அழகு, கல்கண்டு ரவி என்ற பெயர்களைச் சுமந்த தாதாக்களாக ஆனந்தராஜ், இயக்குநர் சுப்ரமணிய சிவா, மதுசூதன்… மூவரில் ஆனந்த்ராஜுக்கு சிரிக்க வைக்கிற வாய்ப்பு அதிகம். தன் கையாளாக இருக்கிற நேபாளி கேட்கும் ஏடாகூட கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்கிற எபிசோடுகள் ரகளையாக கடந்தோட, அவரது இன்னொரு அடியாளாக வருகிற சாம்ஸ் ‘அவனை தூக்கட்டுமா?’, ‘இவனை வெட்டட்டுமா?’ என்றெல்லாம் காட்டும் வெட்டி பந்தா கலகலப்பூட்டுகிறது. அந்த நேபாளி ஆசாமியின் லொடலொட பேச்சும், துறுதுறுப்பான குறும்புகளும் முகபாவமும் ரசிக்க வைக்கின்றன.
நாயகி சிம்ரன் குப்தா புலனாய்வு நிருபராக வருகிறார். சில தருணங்களில் அதீத அறிவாளியாக செயல்படுபவர் பின்னர் அந்த அறிவுக்கு பூட்டு போட்டுவிட்டு என்ன செய்வது ஏது செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறார். நாயகனுடன் டூயட் பாட்டு அது இதுவென எதையும் அவர் மீது திணிக்காமல் விட்டது ஆச்சரியம்; தனித்துவம்.
மாரிமுத்து கெத்தான கேரக்டரில் சில நிமிடங்கள் வந்து ‘மறைகிறார்.’
ஜான் விஜய்க்கு வழக்கம்போல் அயோக்கிய போலீஸ் வேடம்; நடிப்பும் வழக்கம்போல்.
பாவெல் நவகீதனிலிருந்து இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி.
அலட்டலற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிற வெங்கட் பரத், எங்கோயோ கேட்ட மாதிரியிருந்தாலும் நாயகனுக்காக போட்டிருக்கும் அறிமுகப் பாடலில் எனர்ஜிக்கு குறைவைக்கவில்லை.
ஒளிப்பதிவு கதையோட்டத்தை மெருகேற்றியிருக்கிறது.
படத்தின் பின்பாதி முழுக்க ‘இதெல்லாம் சாத்தியமா?’ என யோசிக்க வைக்கும் காட்சிகளால் சூழப்பட்டு மண்டையைச் சூடாக்குகிறது.
வித்தைக்காரன் – மேஜிக் பத்தாது!