வெப்பன் சினிமா விமர்சனம்

வசந்த் ரவி, ‘பொழுதுபோக்கு சினிமாக்களில் நடிக்க மாட்டேன்; கமர்சியல் மசாலா படங்களில் தலைகூட காட்டமாட்டேன்’ என குலதெய்வத்துக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. மனிதர் இந்த முறை தேர்ந்தெடுத்திருப்பதும் தனித்துவமான கதைக்களம். அதுவும் சூப்பர் பவர் ஹியூமன் சப்ஜெக்ட்!

நியூட்ரினோ ஆலையொன்று வெடித்துச் சிதற, அந்த சதிக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளாகிறார் அக்னி (வசந்த் ரவி) என்ற இளைஞர். ‘நான் ஒரு சாதாரண யூ டியூபர், கண்டெண்ட் கிடைக்குமான்னு தேடிப்போன என்னை கூட்டிக்கிட்டு வந்து விசாரிச்சா என்ன அர்த்தம்? எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என மறுக்கிறார் அக்னி. அவர் சொல்வது நம்பும்படியிருக்கிறது.

அப்படியெனில், உண்மையில் நியூட்ரினோ ஆலை வெடித்துச் சிதறியதன் பின்னணியில் இருந்தது யார்? அக்னி நிஜமாகவே யூ டியூபர் மட்டும்தானா? நியூட்ரினோ ஆலை விவகாரத்தில் அவர் சிக்கியது எப்படி? எல்லா குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறது திரைக்கதை.

இந்த கதையில் சர்வாதிகாரி ஹிட்லருக்கும், துணிச்சல்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் தொடர்பிருக்கிறது என்பது விசேஷ செய்தி!

யூ டியூபர், இயற்கை ஆர்வலர், காடுகளை நேசிப்பவர் என்ற அறிமுகத்தோடு படத்தின் முன்பாதியில் அந்நியன் அம்பி போல் அப்பாவி முகபாவம் காட்டுகிற வசந்த் ரவி, பின் பாதியில் எடுத்திருக்கும் சூப்பர் பவர் அவதாரம் எதிர்பாராதது; நடிப்பு பங்களிப்பில் தந்திருக்கும் மிரட்டல் கதைக்குப் பொருத்தமானது.

அதே சூப்பர் பவர் சுமந்து வருகிற சத்யராஜின் தோற்றமும், பார்வையாலேயே எதிரிகளை அடித்துத் துவைத்து, குத்திக் கிழித்து, வெட்டிப் பிளக்கிற ஆற்றல் சிலிர்ப்பை உருவாக்க, மாயாஜால வித்தைகள் போல் அவர் அரங்கேற்றும் விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன.

தான்யா ஹோப்புக்கு வழக்கமான காதலி வேடம்தான் என்றாலும் திரட்சியான இதழ்கள் துடிக்கத் துடிக்க, விழிகளில் மிரட்சி காட்டுகிற காட்சிகளும் உண்டு. கவர்ச்சியான தேகம் அலுங்க குலுங்க ஆடுவதற்கேற்ப பாடலொன்றும் இருக்கிறது.

மனிதர்களை தனது விபரீத ஆராய்ச்சிக்கு ஆளாக்கும் கொடூரனாக வருகிற ராஜீவ் மேனனின் அலட்டலற்ற வில்லத்தனம், அவரது கட்டளையை நிறைவேற்றுகிற ராஜு பிள்ளையின் வெறித்தனம்,வேலு பிரபாகரன், பிக்பாஸ் மாயா உள்ளிட்ட இன்னபிற நடிகர் நடிகைகளின் கச்சிதமான நடிப்பும், தாறுமாறான கதைக்களத்துக்கு தகுந்தபடி ஜிப்ரான் தந்திருக்கும் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

இருள் சூழ்ந்த காட்சிகளில் வைத்திருக்கும் கேமரா கோணங்களும், காடு மலைகளில் தாவித் திரியும் காட்சிகளில் காட்டியிருக்கும் பிரமாண்டமும் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்வின் கடின உழைப்புக்கு சான்று!

சுதேஷின் பயிற்சியில் உருவான, சத்யராஜும் வசந்த் ரவியும் மோதும் சண்டைக் காட்சியில் அனல் பறக்கிறது.

அழிவு சக்தியாக செயல்படுவதற்காக அசுர பலம் செலுத்தப்பட்ட இருவர், அந்த பலத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற கவனம் ஈர்க்கிற சயின்ஸ் பிக்சன் கதையை எடுத்துக் கொண்டு, அதை ஹாலிவுட் பட ஸ்டைலில் விஷூவல் விருந்தாக்கியிருக்கிற இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கு சொல்ல வேண்டிய ஒரு விஷயம்… இதேபோல் பல விருந்துகளை சுவைத்த அனுபவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருக்கிறது.

வெப்பன், தாக்குதல் அதிகம்; தாக்கம் குறைவு!

-சு.கணேஷ்குமார்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here