சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் பாணியில் கதைக்களம் அமைத்து ‘போதை அழிவின் பாதை’ என சமூகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தியிருக்கிற படம்.
பணக்கார குடும்பத்து இளம்பெண்கள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து இஷ்டம்போல் குடிக்கிறார்கள்; வேறு சில போதைப் பொருட்களின் சுகத்தையும் அனுபவிக்கிறார்கள். கண்மண் தெரியாமல் காரில் ஊர் சுற்றுகிறார்கள். பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போதைக்கு அடிமையான அவர்களை இளைஞன் ஒருவன் கடத்துகிறான். கூடவே அவர்களின், எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத ஒரு தோழியையும் கொண்டு வந்து பாழடைந்த கட்டடத்தில் கட்டி வைத்து, அதட்டி உருட்டி உயிர் பயம் காட்டுகிறான். தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் தாக்குகிறான். பக்கத்து அறையில் ஒரு இளம்பெண்ணை கட்டிப் போட்டு அடித்து உதைத்து ரத்தச்சகதியில் குளிப்பாட்டி சித்ரவதை செய்கிறான். அந்த இளைஞனால் கடத்தப்பட்டவர்களை தேடுகிற காவல்துறை அதிகாரியையும் தூக்கி வந்து அந்த பெண்களின் எதிரிலேயே வைத்து துன்புறுத்துகிறான்.
படத்தின் ஒருபாதி அப்படியான தாறுமாறான காட்சிகளோடு கடந்தோட, அவன் அப்படி சைக்கோ தனமாக நடந்து கொள்வது ஏன் என்பதற்கு பதில் சொல்லும் விதமாக விரிகிறது படத்தின் மறுபாதி… இயக்கம் ஹாரூன்
பலமான ஆயுதமாக வடிவமைக்கப்பட்ட ஊன்றுகோலுடன் ஒரு பக்கமாக சாய்ந்து சாய்ந்து நடப்பது, பார்வையில் ஆக்ரோஷம், சிரிப்பில் தெனாவட்டு, செயல்களில் குரூரம் என நடிப்பில் முடிந்தவரை சைக்கோ வில்லனை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். கதையில் திருப்பம் வரும்போது ஹீரோவாகி நடிப்பில் மாற்றம் காட்டியிருப்பது நேர்த்தி!
எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத, போதை விரும்பியாக ஷில்பா மஞ்சுநாத். களையான முகம், சுளையான இளமை என கவர்ந்திழுக்கும் அவர், ‘யார்டா நீ, எதுக்குடா இப்படி பண்றே’ என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலும் அந்த பணக்காரத் திமிர் ஈர்க்கிறது!
ஷில்பாவின் தோழியாக வருகிற சுபப்ரியாவின் செழுமையான உடற்கட்டு, இன்னொரு தோழியின் லட்சணமான முகவெட்டு, மற்ற இரண்டு பெண்களின் நடிப்பிலிருக்கும் பாத்திரத்தின் தன்மைக்கேற்ற பயந்த சுபாவம் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.
நட்டிக்கு துணையாக வருகிற அந்த ஆஜானுபாகுவான பெண்ணின் நடை உடை பாவனை ஏற்றிருக்கும் வில்லித்தனமான பாத்திரத்திற்கு பலம்!
கதை எளிமையாக இருக்க அதைவிட ஒரு வீடு, ஒரு அலுவலகம், ஒரு சேதாரமான கட்டடம் என கதை நிகழ்விடங்களும் எளிமையாக இருக்க அதற்கேற்ப எளிமையான பின்னணி இசையைத் தந்திருக்க்கும் கார்த்திக் ராஜா, ஆண்ட்ரியா பாடியிருக்கும் ‘வீக் என்ட் பார்ட்டி’ பாடலில் உற்சாகம் தெறிக்க விட்டிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டாத, அடுத்தடுத்து இதுதான் நடக்கும் என்பதை சுலபத்தில் யூகிக்க முடிகிற திரைக்கதை படத்தின் பலவீனம்.
வரவர பெண்களும் அதிகளவில் குடிக்கிறார்கள், போதையில் மிதக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து அவர்களைப் போன்றோருக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் ஒரு படைப்பைத் தர முன்வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்!