இட்லியை உதிர்த்து உப்புமா செய்வது வழக்கமான விஷயம். அந்த இட்லி உப்புமாவையே மீண்டும் தாளித்துப் பரிமாறியது போன்ற உணர்வைத் தருகிற கதையோட்டத்தில் ‘ஒயிட் ரோஸ்.’
தீவிரவாதிகளை என் கவுண்டரில் போட்டுத்தள்ள போலீஸ் வைத்த குறி தவறிப்போய், கயல் ஆனந்தியின் கணவரது உயிரைப் பறிக்கிறது. தவித்துப் போய் நிற்கும் அவரை கடன் பிரச்சனை துரத்துகிறது. வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலைக்கும் ஆளாகிறார்.
நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அவருடைய அக்கறையான தோழி தந்த ஆலோசனைப்படி வில்லங்கமான தொழிலில் இறங்கும் முடிவுக்கு வருகிறார். முதல் நாளே சைக்கோ கொலைகாரனிடம் போய் சிக்குகிறார். அவனிடமிருந்து மீண்டு வர போராடுகிறார். அந்த போராட்டத்தின் நீள அகலமே மிச்சசொச்ச கதை… இயக்கம் ராஜசேகர்
கயல் ஆனந்தி ஆரம்பக் காட்சியில், தனது பிறந்த நாளன்று கணவர் தந்த சர்ப்ரைஸை கண்டு மலர்ந்து சிரிக்கிறார். அதன்பின் அவரை அப்படியான உற்சாகத்தோடு பார்க்கவிடாமல் சைக்கோவிடம் கூட்டிப் போய் சேர்த்துவிடுகிறது திரைக்கதை. அதிலிருந்து படம் முழுக்க பயத்தோடும் பதற்றத்தோடும் அழுதுகொண்டே இருக்கவேண்டியது கடமையாகிவிடுகிறது. அதை இயல்பான நடிப்பால் சரியாகச் செய்திருக்கிறார்.
சைக்கோ கொலைகாரனாக ஆர்.கே.சுரேஷ். வசனம் எதுவும் பேசாமல் பார்வையால் மிரட்டுவது, முரட்டுத்தனமாய் தாக்குவது என தந்திருக்கும் பங்களிப்பு பரவாயில்லை ரகம்!
காவல்துறை உயரதிகாரியாக ரூசோ ஸ்ரீதரன். சைக்கோவிடம் சிக்கியிருப்பது தங்கள் துறையினர் தவறுதலாக சுட்டுக் கொன்றவரின் மனைவி என்பது தெரிந்தபின் அவரை மீட்க எடுக்கும் நடவடிக்கையில் 100% சுறுசுறுப்பு காட்டுவது கவனம் ஈர்க்கிறது. சக போலீஸார் உடனிருந்தும் கொலைகாரனிடம் மீண்டும் மீண்டும் தனியாக போய் மாட்டிக் கொண்டு அடிபடுவது வெறுப்பேற்றுகிறது. தவறு அவர் மீதல்ல. அவருக்காக உருவாக்கப்பட்ட காட்சி அப்படி.
வாட்டசாட்டமாக இருக்கிற சசி லயாவுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்திருப்பது பொருத்தம்தான். அவரது ஹேர்ஸ்டைல் அழகாக இருந்தாலும் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு பொருத்தமில்லை.
ஆர்.கே.சுரேஷின் இளவயது கதாபாத்திரத்தில் வருகிறவராகட்டும் இன்னபிற நடிகர், நடிகைகளாகட்டும் அத்தனைப் பேரும் ஈடுபாட்டுடன் நடித்திருப்பது டத்துக்கு பலம்.
ஆர்.கே.சுரேஷின் இளவயது கதாபாத்திரத்தில் வருகிறவராகட்டும் இன்னபிற நடிகர், நடிகைகளாகட்டும் அத்தனைப் பேரும் ஈடுபாட்டுடன் நடித்திருப்பது, சுதர்சனின் திரில்லர் கதைக்களத்துக்கேற்ற பின்னணி இசை, இளையராஜாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
பெண்களை அனுபவிப்பதில் சைக்கோவுக்கு இருக்கிற அருவருப்பான ஆசை கதையிலிருக்கிற டிவிஸ்ட். (இதே டிவிஸ்ட் சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு படத்திலும் இருந்தது. அதை பார்த்தவர்களுக்கு இந்த படத்தின் டிவிஸ்ட் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.) அதை தவிர இயக்குநர் வித்தியாசமாக எதையும் சிந்திக்காததால், ஒயிட் ரோஸில் வெயிட் இல்லை!