யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ள படத்தை அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்குகிறார்.
இந்த படம் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.
இந்த படத்தில் அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக, ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடைவடிவமைப்பு செய்கிறார்.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.