வயதில் மூத்த, 63 வயதான அந்த பெரியவர் உடற்சோர்வு, பசியின்மை, குமட்டல் என கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு, சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையை அணுகினார். அங்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்வாதிராஜு அவரைப் பரிசோதித்தபோது கல்லீரல் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் உயிர் பிழைக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே மாற்று வழி என பரிந்துரைக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, பெரியவரின் கடைசி மகளின் (வயது 33) கல்லீரலை தானமாகப் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உரிய பரிசோதனைகளின் மூலம் அந்த பெண், பெரியவருக்கு கல்லீரல் தானம் செய்ய உகந்தவர் என முடிவு செய்யப்பட்டது.
அந்த பெண்ணும், அவரது கணவரும் ஆரம்பத்தில் பயந்தாலும் ‘கல்லீரல் தானமாக கொடுத்தால் மீண்டும் வளர்ந்து விடும்’ என்ற உண்மையை விளக்கியதும் தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க உணர்வுபூர்வமாக சம்மதித்தார்.
டாக்டர் விவேக்விஜ் தலைமையிலான வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவ நிபுணர்கள் குழு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை (8 மணி நேரம்) வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
கல்லீரல் தானம் தந்த அந்த இளம்தாய் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற அடுத்த 5 நாள்களில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் 9-ம் நாளில் வீட்டுக்குத் திரும்பினார்.
கல்லீரல் தானம் பெற்ற பெரியவர் அடுத்த 6 நாள்களில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு, 17-ம் நாள் வீட்டிற்குத் திரும்பினார்.
கல்லீரல் தானம் பெற்றவரின் உடல்நிலை நன்கு தேறியதையடுத்து, மருத்துவக் குழுவினரும் சிகிச்சை பெற்றவரும் 919.5. 2022 வியாழனன்று) பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஃபோர்டிஸ் வடபழனி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பூர்ணசந்திரன், ‘கல்லீரல்தானம் அளித்தவரும், பெற்றுக்கொண்டவரும், உடல் ஆரோக்கியத்துடன், இயல்பான வாழ்க்கை வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தருவதற்கு ஒப்புக்கொண்ட இளம்தாயின் துணிச்சலையும், அவளது முடிவுக்கு முழுஒத்துழைப்பும், ஆதரவும் அளித்த அவரது கணவரையும் பாராட்டியே தீரவேண்டும். அதேபோல் பல்துறை மருத்துவர்களைக் கொண்ட அறுவை சிகிச்சைக்குழு, தொற்றுநோய்ப் பாதுகாப்புக்குழு, உணவு நிபுணர்கள், பிசியோதெரபி நிபுணர்கள், செவிலியர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து அறுவை சிகிச்சை வெற்றி பெறத் தலைமை வகித்த டாக்டர் விவேக்விஜ் ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
கல்லீரல் தானம் பெற்ற பெரியவர், ”நான் ஆசீர்வதிக்கப்பட்டவனைப் போல் உணர்கிறேன். எனது மகளுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவள் இல்லை என்றால் இன்றைக்கு நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் மிகச்சிறப்பாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக இருந்ததை விடவும் இப்போது எனது ஆரோக்கியம் கணிசமாக மேம்பட்டுள்ளது” என்றார்.
‘அவர் எனக்குத் அப்பா என்பது மட்டுமின்றி அவரது பேரக்குழந்தைகளுக்கு அவர்கட்டாயம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. அவருக்கு நான் கல்லீரல் தந்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்கிறபோது உணர்வுபூர்வமாக இருந்தது. ஆரம்பத்தில் பயம் பதற்றம் இருந்தாலும்,டாக்டர்கள் எந்த பிரச்சனையும் வராது என எடுத்துச் சொன்னதால் கல்லீரல் தானம் தர முன்வந்தேன். என் கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்” என்றார்.
