‘ஓணான்’ சினிமா விமர்சனம்

ஓணான்சினிமா விமர்சனம்

மன்னிப்பே மகத்துவம்‘ கருத்து சொல்ல மற்றுமொரு படம்.

அந்த கிராமத்துக்கு ஆதரவற்றவனாய் வருகிற அந்த இளைஞன், ஊரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றுடன் ஒட்டி உறவாடி, அந்த குடும்பத்துப் பெண்ணுடன் சிநேகமாகி, முறைப்படி அந்த குடும்பத்தின் மருமகனாகிறான்!

அவன் மணமுடித்த பெண்ணின் அண்ணனுக்கு, தன் தங்கைக்கு கணவனாகியிருப்பவன் ஏற்கனவே கல்யாணமாகி மனைவி, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தண்டனை அனுபவித்து வெளியில் வந்திருக்கிற மனநோயாளி என்பது தெரியவருகிறது. அந்த மனநோயாளி தனது குடும்பத்திலுள்ள எல்லோரையும் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கிறான். அந்த இளைஞனின் நடவடிக்கைகளும் அதற்கேற்றார்போலவே இருக்க, அவனிடமிருந்து தனது தங்கையை, குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான் அந்த அண்ணன். அதன் பலன் என்ன? அடுத்தடுத்தக் காட்சிகள் சற்றே அதிர வைக்கின்றன… இயக்கம் சென்னன்

களவாணி‘ படத்தில் கதாநாயகிக்கு அண்ணனாக வந்த திருமுருகன் சதாசிவம் இந்த படத்தின் கதைநாயகன். ‘அவரா இவர்?’ என மலைக்க வைக்கும்படி மல்யுத்தவீரன்போல் உருமாறியிருக்கிற அந்த திருமுருகன் தந்திருக்கிற நடிப்பு திருப்தி. இயக்குநர்கள் வித்தியாசமான பாத்திரங்களை அவரிடம் நம்பி கொடுக்கலாம்!

கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்தின் தேகம் மெழுகு; அவரது விழிகள் காதல் மொழி பேசுவது அழகு!

காமெடியனாக பார்த்துப் பழகிய காளி வெங்கட்டை அதேபோலவும், வேறொரு பரிமாணத்திலும் பார்ப்பது வித்தியாசமான அனுபவம்.

சிங்கம் ரேஞ்சுக்கு ஓப்பனிங் சீன் வைத்து, சரவண சக்தியின் கேரக்டரை சித்தெறும்பாக்கியிருப்பது ரகளை!

சிரிப்புக்கு சிங்கம் புலி. மனிதர் வழக்கம்போல் தனது ஸ்டைலில் கிச்சுக்கிச்சு மூட்டத் தவறவில்லை.

பாசக்கார தந்தை கேரக்டரில் வருகிற ‘பூ’ ராமு உள்ளிட்ட இன்னபிற கதாபாத்திரங்கள் படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்கள்!

ஆண்டனி ஆப்ரகாமின் இசையில் ‘கள்ளிக்காட்டுப் பருந்தே’, ‘மனசுக்குள் இவன் வந்த மாயம் என்ன’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

கதைநாயகனை மன நோயாளி, கொலைகார சைக்கோ என நம்ப வைக்கும் திரைக்கதை, கிளைமாக்ஸ் நெருங்கும்போது ‘பச்சோந்தி‘யாக பாதைமாறிப் பயணிப்பது டிவிஸ்ட்! கடைசிவரை சஸ்பென்ஸாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்!

படத்தில் சென்டிமென்ட், காதல், காமெடி, சஸ்பென்ஸ் என கமர்சியல் அம்சங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த வகையில் ஓணான் உங்களை ஏமாற்றாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here