‘லேபர்’ சினிமா விமர்சனம்

லேபர்‘ சினிமா விமர்சனம்

By சு. கணேஷ்குமார் 99415 14078

திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம்.

கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை ஓரளவு உயிரோட்டமான காட்சிகளாக்கியிருக்கும் ‘லேபர்.’

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பெரிதாய் கையாளாத கதைக்களம். படத்தை இயக்கியிருக்கிற சத்தியபதி, கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் பகுதி நேர செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தொழிலாளர்களுடன் கலந்து பழகிய நேரடி அனுபவம், படத்தை முடிந்தவரை யதார்த்தமாக கட்டமைக்க அடித்தளம் அமைத்திருக்கிறது.

மூன்று தொழிலாளர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக கதை… அப்பாவிகளிடம் பணம் வாங்கி ஏமாற்றும் நபர், ஏழை எளிய மக்களிடம் இருக்கிற மனிதாபிமானம், திருநங்கைகளுக்கு சமூகம் தருகிற அவமானம் என பல விஷயங்களை அலசுகிற திரைக்கதை.

கதை நாயகன் முத்து கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு படத்துக்கு கான்கிரீட் பலம்!

கட்டடத்தின் உறுதிக்கு உதவும் முறுக்குக் கம்பிபோல், கதைநாயகி சரண்யா ரவிச்சந்திரன் தோற்றமும் நடிப்பும் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது!

சிமெண்டோடு ஒட்டிக் கொண்டு கட்டடத்தை இறுக்கிப் பிடிக்கும் கருங்கல்லாய் திருநங்கை ஜீவா சுப்ரமணியம் ஏற்றிருக்கும் பாத்திரமும் அவரது நடிப்புப் பங்களிப்பும்.

கனமான கதைக்களத்தை தாங்கும் தூண்களில் ஒன்றாய் ஆறுமுகன் முருகனின் கதாபாத்திரம் அத்தனை ஸ்ட்ராங்!

நிஜத்தில் கட்டுமானப் பணிகள் நடக்குமிடத்திலேயே காட்சிகளைப் படமாக்கியிருப்பது கதையோட்டத்துக்கான வலுவான அஸ்திவாரம்!

படத்தின் பின்பாதியின் சில காட்சிகளுக்கு மட்டும் கனம் தந்திருக்கிறது நிஜில் தினகரனின் பின்னணி இசை.

ஆவணப் படத்திற்கான அம்சங்களை வைத்துக் கொண்டு, வெகுஜனத்திற்கான கலைப்படைப்பாக உருவாக்க முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் சத்தியபதியை பாராட்டலாம்!

100 நிமிடம் மட்டுமே ஓடும் இந்த படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குநரே பொறுப்பேற்று கச்சிதமாக செய்திருப்பதற்காக  இன்னொரு பாராட்டு!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here