Home விமர்சனம் ‘அலங்கு’ சினிமா விமர்சனம்

‘அலங்கு’ சினிமா விமர்சனம்

‘தமிழில் நல்ல படங்கள் வருவதேயில்லை’ என குறைபட்டுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்போதெல்லாம், கெட்டியான கதையோடு சில படங்கள் எட்டிப் பார்ப்பதுண்டு. அப்படியொரு படைப்பாக இந்தாண்டின் இறுதியில் அட்டனன்ஸ் போடுகிறது ‘அலங்கு.’

சாதாரண நாய் ஒன்றைக் காப்பாற்ற ஒரு குடும்பம் படும் பாடுதான் கதைக்களம். அப்படி அந்த நாய்க்கு என்னதான் பிரச்சனை?

ஊர் பிரசிடென்ட், பெரும் பணக்காரர், தொழிலதிபர். அவரது சிறுவயது மகளை ஒரு நாய் கடித்துவிட, வெறி பிடிக்கிறது அவருக்கு. உடனடியாக ஊரிலுள்ள எல்லா நாய்களையும் கொன்று தீர்க்க தன் அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். நாய்களைக் கொல்வோருக்கு சன்மானம் தரவும் முடிவாகிறது. அப்புறமென்ன, திரும்பிய பக்கமெல்லாம் பேய் வேகத்தில் நடக்கிறது நாய் வேட்டை.

அது ஒரு பக்கமிருக்க, கொல்வதற்கு விஷம் வைத்து தப்பிப் பிழைத்த ஒரு நாயை தூக்கிவந்து பாசத்தை ஊட்டி, ‘காளியம்மா’ என பெயரைச் சூட்டி வளர்க்கிறான் தர்மன். நாய்களை கொன்று குவித்து வருகிற கும்பலிடம் காளி சிக்குகிறது.

அதை மீட்டு வருவதற்காக களமிறங்கும் தர்மன் சந்திப்பதெல்லாம் பயங்கரமான சம்பவங்கள், இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத பதறவைக்கும் காட்சிகள்.

அப்படியான காட்சிகளோடு, தர்மனால் காளியை உயிருடன் மீட்டு வர முடியுமா முடியாதா என்ற பதற்றத்தை ஆடியன்ஸுக்கு கடத்தி வேகமெடுக்கிறது இயக்குநர் எஸ் பி சக்திவேலின் திரைக்கதை…

மலை கிராம இளைஞன் பாத்திரத்துக்கு, தர்மனாக வருகிற குணாநிதி நல்ல பொருத்தம். நியாயமாக கேட்ட கேள்விக்கு தண்டனையாக கல்லூரிப் படிப்பிலிருந்து விலக்கப்படும்போது முகத்தில் காட்டும் இயலாமை, தாய்மையுணர்வோடு நாய் மீது காட்டும் பாசம், உழைக்கேற்ற கூலி கிடைக்காதபோது வெளிப்படுத்தும் ஆத்திரம், நாயை மீட்கும் போராட்டத்தில் அடிதடி வெட்டுக்குத்து என விஷயம் விபரீதமாக மாறும்போது காட்டும் ஆவேசம் என அத்தனையிலும் அவரின் ஈடுபாடு அலட்டலற்ற அசத்தலான அட்டெம்ட்.

கதை நாயகனையும் அவனது நண்பர்களையும் கொலை வெறியோடு துரத்துபவர்களிடமிருந்து காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் அக்கறையில் நெகிழ வைக்கிறது தாய் மாமனாக வருகிற காளி வெங்கட்டின் தரமான நடிப்பு.

பிரசிடென்டாக செம்பன் வினோத், பாசமான தகப்பனாக இருந்து மோசமான செயல்களில் ஈடுபடுகிற விதம் கம்பீரம்.

நிஜத்தில் அத்தனை பளபளப்பாக அத்தனை இளமையாக இருக்கும் ஸ்ரீரேகா, தர்மனின் அம்மாவாக அடையாளம் தெரியாதபடி மாறியிருக்கிறார். யானையைத் துரத்த நாட்டு வெடிகுண்டு வீசி அதிரடி கிளப்பும் அவர், காட்சிகளின் தன்மையுணர்ந்து உணர்வுபூர்வமான மனுஷியாய் களமாடி மனதில் நிறைகிறார்.

பிரசிடெண்ட்க்காக அநியாய அக்கிரமங்களை அன்லிமிட்டெடாக செய்கிற சரத் அப்பானியின் வில்லத்தனத்தில் வீரியமிருக்கிறது. இன்னபிற நடிகர் நடிகைகள் கதைக்களத்துக்கு மிகமிக பொருத்தமாக இருப்பதோடு கேரக்டர்களாகவே மாறியிருப்பது படத்துக்கு பலம் கூட்டியிருக்கிறது.

காளி என்ற பெயரில் வரும் நாயிடமிருந்து அப்படியொரு நடிப்பை எப்படித்தான் வெளிக்கொண்டு வந்தார்களோ தெரியவில்லை; ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

ஓங்கி வளர்ந்த மரங்கள், அச்சமூட்டும் காட்டுப் பாதை, அதற்குள் பதுங்குமிடம் என கதையின் போக்கில் விறுவிறுப்பின் சதவிகிதத்தைக் கூட்டும் இடங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு.

அஜீஷின் பின்னணி இசையிலிருக்கும் சுறுசுறுப்பு பாடல்களிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதில், யானைகள் நடமாடுவதில், ஆட்கள் மீது பாம்பு ஏறி வளைந்து நெளிந்து பயணிப்பதில் சீஜி தொழில்நுட்பப் பங்களிப்பு நேர்த்தி.

சமூகத்தில் நாய்களுக்கு நேர்கிற அசம்பாவிதங்களையும், மனிதர்களுக்கும் நாய்களுக்கான உறவையும் மையப்படுத்தி தனித்துவமாக உருவாகியிருக்கும் இந்த அலங்கில் தமிழ் சினிமாவை தரம் உயர்த்திய படங்களின் வரிசையில் இணைவதற்கான தகுதிகள் தாராளம்; ஏராளம்.

இன்னொரு முக்கியச் செய்தி, நாய்கள் குறித்து ‘டாக்’மென்ட்ரி எடுக்க முன்வருவோர் இந்த படத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டால் குறிப்புகள் குவியும்.

அலங்கு _ கதை புதிது, களம் பெரிது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்