Home விமர்சனம் பெருசு சினிமா விமர்சனம்

பெருசு சினிமா விமர்சனம்

இறந்தவரின் உடல் விரைத்துப் போவது சகஜம். அதுவே, இறந்தவரின் ‘அந்த’ உறுப்பு விரைத்துப் போனால்?

அப்படியொரு அந்தரங்க மேட்டரை ‘பெருசு’படுத்தி அட்ராசிடி செய்திருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம்.

அப்பாவை அந்த கோலத்தில் பார்க்கும் மகன்களாக வைபவ், சுனில்,

கணவரை அந்த கோலத்தில் பார்க்கும் மனைவியாக தனம்,

மாமனாரை அந்த கோலத்தில் பார்க்கும் மருமகள்களாக சாந்தினி, நிஹாரிகா…

இன்னும் சிலரும் அப்படி பார்ப்பது நெளியவைத்தாலும், அப்படியொரு கோலத்தை ஊர் உலகம் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு மூடி மறைப்பதெல்லாம், சந்தேகப்படுபவர்களை சமாளிப்பதெல்லாம் சிடுமூஞ்சியாக இருந்து செத்தவன்கூட எழுந்து சிரிக்கும் விதத்திலான எக்குத்தப்பான எபிசோடுகள்.

எந்த நேரமும் குடித்தபடி எல்லா விஷயத்தையும் வெகுளித்தனமாக அணுகும் பாத்திரத்தில் வைபவின் நடிப்பு தரம்; தனித்துவம்!

பாலசரவணன் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது; கூடவே ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், முனீஸ்காந்த், கருணாகரன் என ரகளையான பார்ட்டிகள் ரவுண்டு கட்டி அடிப்பதில் அடிவயிறு புண்ணாக வாய்ப்பு அதிகம்.

செங்குத்தாக போஸ் கொடுத்து செத்துப் போனவரின் ‘சின்னவீடு’, சாவு வீட்டுக்குள் நுழைந்து ‘மாமா,’ ‘மாமா’ என்று சொல்லி அழுது செய்யும் ஆர்ப்பாட்ட அமளிதுமளியில் தியேட்டர் சிரிப்பலையில் குலுங்கி அடங்குகிறது. அவருக்காக இளையராஜாவின் ‘வனிதாமணி வனமோகினி’ பாடலை எடுத்துப் போட உற்சாக மூடுக்கு டிரான்ஸ்பராகிறார்கள் ரசிகர்கள்.

‘நான் ஏதாச்சும் உதவி செய்யட்டுமா?’ ‘நான் ஏதாச்சும் உதவி செய்யட்டுமா?’ என்று கேட்டுக்கேட்டு எழவு வீட்டாரின் பிபியை எகிறவைக்கிற பக்கத்துவீட்டு பெண்மணியாக ரமா. அந்தம்மா கத்திக் கதறி கண்ணீரில் குளிக்காமல் நடித்திருக்கும் படம் இது என்பது விசேஷச் செய்தி.

பின்னணி இசைக்கு சுந்தரமூர்த்தி, பாடலின் இசைக்கு அருண் ராஜ் என பங்கு பிரித்து பக்காவாக பணியாற்றியிருக்க, கச்சிதமான ஒளிப்பதிவால் கவர்கிறார் சத்யதிலகம்.

எடுத்துக் கொண்டது 100 சதவிகிதம் அடல்ட் கன்டென்ட் என்றாலும் முடிந்தவரை அடக்கி வாசித்திருக்கிற திரைக்கதையைப் பாராட்டலாம். வயது வந்தோர் தனித்தனியாக ரசிக்கலாம்; சிரிக்கலாம். குடும்பமாக சேர்ந்துபோய் பார்ப்பதை தவிர்க்கலாம்.

பெருசு _ ரவுசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்