‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். கன்னடத் திரையுலகில் வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல கன்னடத் நடிகை ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய நடிகர் உதயா, “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன்” என்றார்.
நடிகர் அஜ்மல், “இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்” என்றார்.
நடிகை ஜான்விகா, “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்” என்றார்.
வீடியோ காலில் பேசிய நடிகர் யோகி பாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றார்.
பாடலாசிரியர் ஹைட் கார்த்தி, “இந்த படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த டிரெய்லர் பார்க்கும் போதே ‘அக்யூஸ்ட்’ பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம், தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார், பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம், சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன், நடிகர் ஆனந்த்பாபு, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளரும் நடிகர் உதயாவின் தந்தையுமான ஏ.எல். அழகப்பன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
