ராவான மேக்கிங்கில் ராத்திரியில் நடக்கும் கதை.
ஒரு கார், ஆறு பேர். அவர்களுக்குள் குடிபோதையில் தகராறு. ஒருவர் மது பாட்டிலால் குத்தபட்டு சரிகிறார். அவரைக் கொன்றது யார் என்ற கேள்வி உருவாகி, நண்பர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து, சண்டையாகிறது.
அப்படியே, இறந்தவரை டிக்கியில் போட்டுக்கொண்டு காரில் பயணத்தை தொடர்கிறார்கள்.
சடலத்தை வைத்துக்கொண்டு போலீஸ் பரிசோதனைகள் அதிகம் நடக்கும் சாலையில் பயணிப்பதெல்லாம் சவாலான விஷயம். அந்த சவால்களை எப்படி சமாளித்தார்கள்? சடலத்தை என்ன செய்தார்கள்? என்பதற்கெல்லாம் தனது திரைக்கதையில் பதில் சொல்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா. பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது படத்தின் தனித்துவம்.
பதற்றச் சூழலிலும் முடிவுகள் எடுப்பதில் தெளிவு, நண்பர்களிடம் காட்டும் கண்டிப்பு என களமாடும், கர்லி என்ற பெயரில் வருகிற வேலவனின் நடிப்பு கச்சிதம்.
தக்ஷா, தனபால், சம்பா சிவம், அர்ஜுன் தேவ் என மற்றவர்கள் கதையின் தேவையை பரவாயில்லை ரக நடிப்பால் நிரப்பியிருக்கிறார்கள்.
கதையோட்டம் முழுதும் ஒரே காருக்குள், ஒரே இரவுக்குள் என்றாகிவிட அதற்கேற்ற கோணங்களாலும் ஒளியமைப்பாலும் காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.
அனிலேஷ் எல் மாத்யூவின் பின்னணி இசை கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக பரவிப்பாய்கிறது.
திரில்லர் அனுபவம் தருகிற இந்த கதைக்களத்தின் மூலமாக, மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் நிறம் மாறுவார்கள் என்பதை எடுத்துக்காட்டியிருப்பது நேர்த்தி. அந்த கிளைமாக்ஸ் ‘பல்ஸை’ எகிற வைக்கிறது.
படத்தின் மேக்கிங் வித்தியாசமான படங்களை விரும்புகிறவர்களை மட்டுமே திருப்திபடுத்தும் விதமாக இருப்பது பலவீனம்!
-சு.கணேஷ்குமார்

