16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமல்லுவின் உண்மை வரலாற்றோடு கமர்சியல் சினிமாவுக்கான கற்பனை கலந்து, இயக்குநர்கள் ஜோதி கிருஷ்ணாவும் கிரிஷ் ஜாகர்லமுடியும் இணைந்து இயக்கியிருக்கும் படம்.
திருடுவதை தொழிலாக கொண்டிருக்கிற ஹரிஹர வீரமல்லு, ஒரு கட்டத்தில் டெல்லியை ஆளும் மொகலாய மன்னன் ஒளரங்கசீப் வசமிருக்கும் கோஹினூர் வைரத்தை அபகரிக்கும் பொறுப்பை ஏற்கிறார். அந்த பணியை முடிக்கப் போனவர், ஒளரங்கசீப்பிடம் அடிமையாகிக் கிடக்கும் இந்து மத மக்களை மீட்க களமிறங்குகிறார்… ஒளரங்கசீப்பிடம் நேருக்கு நேர் மோத தயாராகிறார்.
அந்த மோதலின் விளைவுகள் இரண்டாம் பாகமாக வரவிருக்கிறது என்று சொல்லி நிறைவுக்கு வருகிறது இந்த படத்தின் கதை.
ஹரிஹர வீரமல்லுவாக, அபூர்வ சக்திகள் படைத்தவராக பவன் கல்யாண். களவாடுவதில் சாமர்த்தியசாலியாக, சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்கிற வீரனாக, சூப்பர் ஹீரோவாக சுழன்றடிக்கிறார். எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது. ‘கேக்கணும் குருவே’ என்றொரு பாடலை சொந்தக்குரலில் பாடி அதையும் ரசிக்க வைக்கிறார்.
மாற்று மதத்தினரை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி கொடுமைப் படுத்துவது, மக்களை அடிமையாக நடத்துவது என கொடுங்கோலனுக்கான இலக்கணங்களை சரியாக வெளிப்படுத்தி மிரட்டுகிறார் ஒளரங்கசீப்பாக வருகிற பாபி தியோல்.
ஹீரோவுக்கு பொருத்தமான ஜோடியாக நிதி அகர்வால். நடன மங்கையாக வருகிற அவர் ‘தார தார கண்ணழகு’ பாடலுக்கு ஆடும் ஆட்டத்தில் விழிகளின் அசைவால் கவர்கிறார்.
சத்யராஜ் உள்ளிட்ட இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நேர்த்தி.
பாடல்களை இதமாக தந்திருக்கும் ஆஸ்கர் நாயகன் கீரவாணி சண்டைக் காட்சி, போர்க்களக் காட்சி என கதையோட்டம் வெறித்தனம் கொண்டிருக்க பின்னணி இசையை அதற்கேற்ற அதிரடியோடு டெலிவரி செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் இருவரின் பங்களிப்புக்கான பாராட்டுக்களை வீரமல்லு அடித்துச் சுருட்டிய வைரங்களிலிருந்து எடுத்துக் கொடுக்கலாம். அந்தளவுக்கு தரம்.
இஸ்லாமியர்கள் ஆட்சியில் இந்து மதத்தினர் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை துணிச்சலாக சொன்ன விதத்தால் படம் சிலருக்கு அளவுக்கதிகமாக பிடித்துப் போகும். படம் சொல்ல வரும் கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் நல்லதொரு சாகசப் படமாக தேறிவிடுகிறது.
வீரமல்லு – வசூல் அள்ளு!


