டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா நடிப்பில், கருணாநிதி இயக்கியுள்ள ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோ கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் டி டி எஃப் வாசன், ”இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.
இயக்குநருக்கு முதலில் கர்ணன் – அதன் பிறகு கருணாகரன்- இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.
படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.
உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது.
நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் ‘ஐபிஎல்’ வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கருணாநிதி, ”ஐபிஎல்- இந்தியன் பீனல் லா- இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்… இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.
இது போன்றதொரு செய்தியைத் தான் ‘ஐபிஎல்’ படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பாடலாசிரியர் கு. கார்த்திக், பாடலாசிரியர் மோகன் ராஜ், நடிகை குஷிதா, நடிகை அபிராமி, நடிகர் கிஷோர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

