இந்த படம் டூர் கூட்டிப்போவதுபோல் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும்! -யெல்லோ பட விழாவில் இயக்குநர் ‘உத்ரா புரொடக்சன்ஸ்’ ஹரி உத்ரா பேச்சு

இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்களை எடுத்துக்காட்டும் விதத்தில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘யெல்லோ.’

இந்த படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹரி மகாதேவன் ”தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன். நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார்.

வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன்.

அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி.

என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.

நடிகை பூர்ணிமா ”எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.

ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால் இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம்.

இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா ”நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும்.

இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here