Home விமர்சனம் மதறாஸ் மாஃபியா கம்பெனி சினிமா விமர்சனம்

மதறாஸ் மாஃபியா கம்பெனி சினிமா விமர்சனம்

தாதா – போலீஸ் மோதலில் மீண்டுமொரு படம்.

சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பெரியளவில் குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருப்பவர் பூங்காவனம். அவர் மீது 60க்கு மேற்பட்ட கொலைக்குற்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு எஃப் ஐ ஆர்.கூட போட முடியாத, சட்டத்தின் பிடியில் யாராலும் சிக்கவைக்க முடியாத நிலைமை. அந்த நிலைமையை மாற்ற களமிறங்குகிறார் பெண் போலீஸ் ஒருவர். தவிர, எல்லா தாதாக்களுக்கும் இருப்பதுபோல் பூங்காவனத்துக்கும் எதிரிகள் உண்டு. அதில் ஒரு டீம் அவரை ஒழித்துக்கட்ட திட்டமிடுகிறது.

இப்படி சூடுபிடிக்கும் கதையில் பூங்காவனத்தின் அராஜக அநியாயத்தை முடிவுக்கு கொண்டு வருவது யார் என்பது கிளைமாக்ஸ்.

அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என தனக்கு பழக்கப்பட்ட சமாச்சாரங்களை வழக்கமான மிரட்டலுடனும் ரசிக்கும்படியான காமெடி கலந்தும் செய்திருக்கிறார் பூங்காவனமாக வருகிற ஆனந்த்ராஜ்.

பூங்காவனத்தை கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதை லட்சியமாக கொண்டு களமாடும் காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா. காக்கி உடைக்கேற்ற கம்பீரமான உயரத்தில் இருப்பவர் நடையிலும் நடவடிக்கைகளிலும் கெத்து காட்டி, ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கச் செய்கிறார். ‘திகழ் பாரதி’ என்ற அவரது கதாபாத்திரப் பெயரும் தனித்துவம் பெறுகிறது.

பூங்காவனத்தின் மனைவிகளாக தீபா சங்கரும், சசி லயாவும் சக்களத்திச் சண்டையில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் மூன்றாவது பெண்மணி வந்தபின் சொத்துப் பிரிப்பு விவகாரத்தில் உடன்படிக்கைக்கு வருவதும் கலகலப்புக்கு உதவுகிறது. ரவுடியாக வருகிற முனீஸ்காந்த் தன் பங்குக்கு லேசாக சிரிக்க வைக்கிறார்.

கேடுகெட்ட தகப்பனுக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிற மகளாக ஆராத்யா உட்பட இன்னபிற நடிகர் நடிகைகள் தங்கள் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா ஒரு உற்சாகப் பாட்டு, ஒரு மெலடி மெட்டு, வழக்கம்போல் ஒரு குத்துப் பாட்டு என இசையில் வெரைட்டி காட்ட, மகன் போட்டுக்கொடுத்த இசையில் தந்தை தேவா பாடிய ‘மச்சி நீ பாடுடா’ பாடலும் காட்சியும் ரகளையாக இணைந்திருக்க, ‘ரங்கலாலா’ பாட்டுக்கு அஸ்மிதா போட்டிருக்கும் ஆட்டமும் ததும்பும் கவர்ச்சியும் பட்டாசாகியிருக்கிறது.

காவல்துறை பூங்காவனத்தை துரத்திக் கொண்டு ஆந்திரப் பிரதேசத்துக்கு போகிற காட்சிகள் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது. கிளைமாக்ஸ் ரசிகர்களை முட்டாள்கள் என நினைத்து உருவாக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

ரவுடிகளுக்குள் தொழில் போட்டி, அதனால் விஸ்வரூபமெடுக்கும் பகை, ரவுடிகளை களையெடுக்கத் துடிக்கும் காவல்துறை அதிகாரி என வி.சுகந்தி அண்ணாதுரை எழுதிய பழகிப்போன கதைக்கு முடிந்தவரை பரபரப்புடனும் காமெடி கலாட்டாக்களுடனும் திரைக்கதை அமைத்து இயக்கி படத்தை கமர்ஷியல் என்டர்டெயினராக்கியிருக்கிறார் ஏ.எஸ்.முகுந்தன்.

-சு.கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்