Home Uncategorized ‘ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் சீரிஸ் விமர்சனம்

‘ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் சீரிஸ் விமர்சனம்

‘இது வித்தியாசமான கதை’, ‘வித்தியாசமான முயற்சி’ என்றெல்லாம் சொல்லும்படியான படைப்புகளின் வரிசையில் இடம்பெறுவதற்குத் தகுதியுள்ள ‘ஹார்ட்டிலே பேட்டரி.’

அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடுள்ள இளம்பெண் சோபியா, ‘லவ் மீட்டர்’ என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள். காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா, பொய்யாக பழகுகிறார்களா என்பதை சொல்லிவிடும். அதைவைத்து ஒருசில காதல் ஜோடிகளை சோதித்துப் பார்க்க, அதனால் கிடைக்கிற அனுபவங்கள் ஏடாகூடமாக இருக்கிறது.

அப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, சமீபத்தில் அவளுக்கு அறிமுகமாகி பழகிக் கொண்டிருக்கும் இளைஞன் அவள் மீது காதல் வசப்படுகிறான். அவளுக்கு அவனை பிடித்திருந்தாலும், அவனை காதலிக்கிறோமா இல்லையா என்ற குழப்பம் இதயத்தை இம்சை படுத்துகிறது. இருக்கவே இருக்கிறது லவ் மீட்டர். அதை வைத்து குழப்பத்தை தீர்த்துக்கொள்ள நினைக்கிறாள். அதன் விளைவுகளே சீரிஸின் சுவாரஸ்யமான மீதிக்கதை…

கண்டுபிடிப்பு எதுவானாலும் ஒரு பக்கம் விபரீதமும் இருக்கவே செய்யும். அதையும் லேசாக தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்கம் சதாசிவம் செந்தில் ராஜன்.

தன் கண்டுபிடிப்பு தப்பு செய்யாது என நம்புவது, அந்த நம்பிக்கையால் ஒரு தடவை பல்பு வாங்கியதும் கருவியை குப்பைத் தொட்டியில் வீசுவது, மீண்டும் அதன் மீது நம்பிக்கை வந்து சோதனைக்கு உட்படுத்துவது என நீளும் காட்சிகளில் சோபியாவாக வருகிற பாடினி குமாரின் நடிப்பில் உற்சாகம் தெறிக்கிறது. தன்னுடன் பழகி, காதலைச் சொன்ன இளைஞனிடம் தன் அப்பா அம்மாவின் பிரிவு பற்றி எடுத்துச் சொல்லி மனம் கலங்கும்போது நடிப்பில் முந்தைய உற்சாகங்கள் அனைத்தையும் தொலைத்த வேறொரு பரிமாணம் தெரிகிறது.

நாயகன் குரு லெஷ்மண் எதையுமே ஈஸியாக எடுத்துக் கொள்கிற நபராக கண்களில் குதூகலத்தை நிரப்பிக் கொண்டு வலம் வருகிறார். அவர் ஹீரோயினை சந்திக்கும் தருணம் அத்தனை கலகலப்பு. ‘இந்த மெஷின் சொல்றது தப்புனு சொல்லிட்டு நீ என்னை லவ் பண்ணுவ’ என்று சவால் விட்டு சீரிஸின் பயணத்தை சற்றே சீரியஸான பாதையில் பயணிக்க வைப்பதும் அவர்தான்.

குருவின் நண்பனாக வருகிற இளைஞனின் காதல், லவ் மீட்டரால் புட்டுக்கொள்ள அதன்பிறகு அவர் நடந்துகொள்ளும் விதம் சிரிப்புக்கு உத்தரவாதம்.

ஹீரோவின் அப்பாவாக வருகிற ஜீவா ரவியில் துவங்கி சுமித்ரா தேவி, அனித் யாஷ்பால், யோகலெஷ்மி, இனியாள், ஷர்மிளா, பிரவீனா பிரின்ஸி, கலை, அஜித், பவித்ரா, சீனு என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்போர் அப்படியும் இப்படியும் கதையின் தேவைக்கேற்ப நடமாடுகிறார்கள்.

கூலி’ செளந்தரராஜனின் ஒளிப்பதிவில் விருகம்பாக்கம், அண்ணா நகர் என சென்னையின் சில பகுதிகளிலுள்ள பரபரப்பை பார்க்க முடிகிறது. மைக்கேல் ஆகாஷின் பின்னணி இசை காட்சிகளின் நகர்வுக்கு பக்கபலம்.

நன்னாடு, தென்னாடு என்ற பெயரிலிருக்கும் நாடுகளை மையப்படுத்திய ராஜா காலத்து காதல் கதையொன்று எபிசோடுகளுக்கிடையில் எட்டிப் பார்ப்பது கவனத்தை ஈர்க்க, அந்த காட்சிகளின் ஏ ஐ உருவாக்கத்தில் எளிமையும் நேர்த்தியும் இணைந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

‘மெஷினால நோய் இருக்கான்னு கண்டுபிடிக்க முடியுது. உண்மை சொல்றாங்களா பொய் சொல்றாங்களான்னு கண்டுபிடிக்க முடியுது. அப்படியிருக்கிறப்போ மெஷினால லவ் பண்றாங்களானு கண்டுபிடிக்க முடியாதா?’ என்ற கேள்வியை முன்வைத்து, அறிவியலும் காதலும் கலந்த காம்போவாக Zee5 தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸில் காமெடி கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லை.

ஹார்ட்டிலே பேட்டரி _ சார்ஜ் நிக்குது!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
'ஹார்ட்டிலே பேட்டரி' வெப் சீரிஸ் விமர்சனம்
Previous article
Next articleஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய வழிவகுக்கும் மிகப்பெரிய புதிய தளமாக உருவானது INDIAN FILM MARKET.
h-79'இது வித்தியாசமான கதை', 'வித்தியாசமான முயற்சி' என்றெல்லாம் சொல்லும்படியான படைப்புகளின் வரிசையில் இடம்பெறுவதற்குத் தகுதியுள்ள 'ஹார்ட்டிலே பேட்டரி.' அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடுள்ள இளம்பெண் சோபியா, 'லவ் மீட்டர்' என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள். காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா, பொய்யாக பழகுகிறார்களா என்பதை சொல்லிவிடும். அதைவைத்து ஒருசில காதல் ஜோடிகளை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்