Home விமர்சனம் ட்ரீம் கேர்ள் சினிமா விமர்சனம்

ட்ரீம் கேர்ள் சினிமா விமர்சனம்

கடுமையான வெயில், உடல் முழுக்க வியர்வை. ஒரு விசிறி கிடைத்தால் லேசாக விசிறிக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு. அந்த நேரமாகப் பார்த்து ஒரு ஏசி அறைக்குள் நுழைகிற வாய்ப்பு. அந்த ஃபீலிங் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். அப்படியொரு அனுபவம் தருகிற கதை…

திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியிலிருக்கும் கிருஷ்ணாவின் கண்ணில் சிக்குகிறாள் அஞ்சலி. கிருஷ்ணா அவளை தன் படத்தின் கதாநாயகியாக்க விரும்புகிறான். அவள் சம்மதிக்க, போட்டோ ஷூட் அதுஇதுவென கிருஷ்ணாவும் அஞ்சலியும் அடிக்கடி சந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் சந்திப்பதை, நெருங்கிப் பழகுவதை அஞ்சலியைக் காதலிக்கும் இளைஞன் தவறான நினைக்கிறான். அதனால் காதலனை வெறுக்கும் அஞ்சலிக்கு கிருஷ்ணா மீது ஈர்ப்பு உருவாகிறது. கிருஷ்ணாவுக்கும் அஞ்சலியை பிடித்துப் போக, அஞ்சலியின் காதலன் அவர்களின் காதலுக்கு எதிரியாகிறான்…

‘என்ன, கதை இப்படி உப்புசப்பில்லாமல் நகர்கிறதே’ என்ற எண்ணம் நமக்குள் எட்டிப் பார்க்கும்போது அஞ்சலி ரயிலில் அடிபட்டு மரணமடைகிறாள். ‘பரவாயில்லை, கதை சூடு பிடித்துவிட்டது’ என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதுவரை நடந்த எல்லாமே கிருஷ்ணா கண்ட கனவு என்கிறது எம் டி தமிழரசன் அமைத்திருக்கும் திரைக்கதை…

இப்போது நம் மனதில் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துகொள்ள, கிருஷ்ணாவின் கனவில் வந்த பெண் ‘நினைத்தேன் வந்தாய்’ ரம்பா போல் நிஜமாகவே நேரில் வருகிறாள்; கிருஷ்ணாவை சந்திக்கிறாள். கனவில் நடந்த அத்தனையும் நிஜத்திலும் நடக்கத் தொடங்குகிறது… அப்படியெனில் அந்த ரயில் விபத்து?

அது நடக்கிறதா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்…

கிருஷ்ணாவாக ஜீவா. எந்நேரமும் புன்னகைப்பது போலவே அமைந்திருக்கிற அவரது குழந்தைத்தனம் நிரம்பியிருக்கிற முகம் வருத்தம், சோகம், அழுகை என கனமான உணர்வுகளை பிரதிபலிக்கத் திணறினாலும் காதல், உற்சாகம் என மற்ற விஷயங்களில் சரியாகவே ஒத்துழைக்கிறது.

அஞ்சலியாக ஹரிஷ்மிதா. நல்ல உயரம். மாடர்ன் உடைகளில் அழகு அள்ளுகிறது. நடிப்புக்கு பாஸ்மார்க் கொடுக்கலாம்.  பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா என மிச்சமுள்ள சில கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் குறை வைக்கவில்லை.

இளமாறன் இசையில், கு கார்த்திக் வரிகளில் ‘கார்த்திராளே கனவாய் வந்து’ பாடல் கிறக்கமூட்டுகிறது. பின்னணி இசை கதையின் தேவைக்கேற்ற அதிர்வலையை தருகிறது.

ஊட்டி இயல்பாகவே திரும்பிய பக்கமெல்லாம் பியூட்டி. அதை இன்னும் அழகாக காட்ட சின்சியராக டியூட்டி பார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ்.

படத்தின் நீளம் 90 நிமிடங்கள் மட்டுமே. எஸ் பி அஹமதுவின் எடிட்டிங் அத்தனை ஷார்ப்.

நேற்று சாட்டிங், இன்று மீட்டிங், நாளை டேட்டிங், மறுநாள் டாடா காட்டிங் என காதலும் காதலர்களும் தாறுமாறாய் பயணித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதில் காட்டும் மென்மையான அணுகுமுறையில் ஒரு சிலிர்ப்பான காதல் கதையை உருவாக்கி இயக்கியிருக்கிறார் எம்.ஆர்.பாரதி.

காலத்திற்கேற்ற பரபரப்பான படைப்பாக இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ரசிக்கத்தக்க படங்களில் சேர்க்கலாம். அந்த தகுதி ட்ரிம் கேர்ளிடம் கணிசமாக இருக்கிறது.

-சு.கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்