மின்சார உற்பத்தி நகரமான நெய்வேலியில் ஷாக்கடிக்கும் சம்பவங்களாக தொடர் கொலைகள் நடக்கிறது. ஏன் நடக்கிறது, நடத்துவது யார் என்பதை கண்டறியும் பொறுப்புக்கு வருகிறார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவர். அவர் தன் அனுபவ அறிவால் கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே அறிவானின் திரைக்கதை…
பெரியளவிலான குற்றங்களின் பின்னணியைக் கண்டறிய சஸ்பென்ஸனில் இருக்கிற அதிகாரியை இழுத்துப் போடுகிற டெம்ப்ளேட் நடைமுறைப்படி களமிறங்குகிற அதிகாரியாக ஆனந்த் நாக். ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் கம்பீரம் குறைவாக தெரிந்தாலும் போகப்போக காக்கி யூனிஃபார்ம்க்கான கெத்தை கணிசமாக காட்டிவிடுகிறார்.
நாயகி ஜனனி தான் ஏற்றிருக்கும் புலனாய்வுப் பத்திரிகையாளர் பணியை துடிப்பாகவும் ஹீரோவை காதலிக்கும் கடமையை கச்சிதமாகவும் செய்திருக்கிறார்.
யமுனா என்ற பெயரில் இரண்டாவது நாயகியாக வருகிறவர் காமவெறியர்கள் மீதான ஆத்திரத்தை செயல்களாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தும்போது பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். இன்னபிறர் கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்க, இராவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பரபரப்பின் சதவிகிதம் அதிகரிக்க உதவியிருக்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் நீட் அன்ட் கிளீனாக இருக்கிற நெய்வேலி டவுன்ஷிப்பை கழுகுப் பார்வையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த்.
சைக்கோத்தனமாக கொலைகள், அதன் பின்னணி என பின்னப்பட்ட கதைக்களம் பழகியதாக இருந்தாலும் கதையிலிருக்கும் டிவிஸ்ட் படத்திற்கு வேகம் தருகிறது.
சீரியஸ்னஸை குறைக்கும் அச்சுப்பிச்சு காமெடிகள், அவசியமற்ற காதல் களேபரங்கள் என வலிந்து எதையும் திணிக்காமல் கதையை நேர்க்கோட்டில் செலுத்தியிருப்பதற்காகவும் இயக்குநரை எளிமையான நடிகர் நடிகைகளை வைத்துக்கொண்டு எளிய பட்ஜெட்டில் படத்தை இயக்கியிருப்பதற்காகவும் இயக்குநர் எஸ் அருண் பிரசாத்தை பாராட்டலாம்.
அறிவான் _ பரவலாக வெற்றி பெறுவான்!
-சு.கணேஷ்குமார்

