Home Uncategorized திவ்யா சினிமா விமர்சனம்

திவ்யா சினிமா விமர்சனம்

உலகம் இருக்கும்வரை ஆணவக் கொலைகளும் நடக்கும் போலிருக்கிறது. அதற்கு முடிவில்லாதவரை, ஆணவக் கொலை சம்பந்தப்பட்ட திரைப்படங்களையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே கசப்பான உண்மை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த வார வரவு ‘திவ்யா.’

அப்பா அம்மாவை இழந்து, தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிற சிவா கல்லூரியில் படிப்பதோடு, வாய்ப்பு கிடைக்கும்போது வருமானத்துக்காக, தங்களது பறையடிக்கும் பரம்பரைத் தொழிலில் ஈடுபடுகிறான். அவனை அவனுடன் படிக்கும் உயர்சாதிப் பெண்ணான திவ்யா காதலிக்கிறாள். அவள் காதலிப்பதால் அவனும் காதலிக்கிறான்.

இப்படி துவங்கும் கதையில், எந்த சஸ்பென்ஸும் வைக்கக்கூடாது என்று ஆரம்பத்திலேயே திவ்யாவின் அப்பா சாதிப்பாகுபாடு பார்ப்பவர் என்பதை காண்பித்துவிட, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று நாம் நினைக்கிறோமோ அது எல்லாமே நடக்கிறது… இயக்கம் ஆர் ஜெ பி

திவ்யாவாக கேத்தி. பளீர் நிறத்தில் பளபளவென்றிருக்கும் அவர் சிவாவின் உணர்வைத் தூண்டி விட்டு தன்னைக் காதலிக்க வைக்கும் தருணம் அழகிய கவிதையாக, எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கலாம் என்கிற அளவில் இருக்கிறது. அதை தவிர்த்துப் பார்த்தால் சினிமாக்களில் ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் சரியாகச் செய்கிறார்; கீழ்சாதிக்கார இளைஞனைக் காதலிக்கும் பெண்கள் எப்படியான துன்பங்களை அனுபவிப்பார்களோ அதையெல்லாம் ஜெராக்ஸ் எடுத்ததுபோல் அனுபவிக்கிறார். நடிப்பு இயல்பாக இருக்கிறது. அழுத்தமான கதைகளில் நடித்தால் முன்னுக்கு வர வாய்ப்புண்டு.

சிவாவாக ஆர் ஜெ பி. தோற்றத்தைப் பார்த்தால் கல்யாணமாகி ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பார் என தோன்றுகிறது. அவர் கல்லூரி மாணவராக 20 வயதுக்குட்பட்டவராக வருகிறார். வறுமைச் சூழலில் இருந்துகொண்டு பணக்காரக் குடும்பத்துப் பெண்ணை காதலிக்கிறார். அந்த காதலுக்கு எதிர்ப்பு வந்தவுடன், காதலியின் வீடு புகுந்து ‘எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்றெல்லாம் சவால் விடுகிறார்; ‘நீ வா கல்யாணம் செய்துக்கலாம்’ என காதலியை கூட்டிக்கொண்டு போகிறார். சாதி வெறியர்களை எதிர்க்கும் அளவுக்கு தேவையான துணிச்சலில்லை; தன்னை நம்பி வரும் பெண்ணுடன் குடும்பம் நடத்தும் அளவுக்கு வருமானமில்லை. இருந்தாலும் நண்பர்கள் உதவியோடு கெத்து காட்டுவது போன்ற கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து ‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’ என்று கேட்கத் தோன்றுகிறது. நடிப்புப் பங்களிப்பு பற்றி கேட்டால் ‘பரவாயில்லை’ என்று சொல்ல வேண்டியிருக்கும்.

திவ்யாவின் அப்பாவாக அனந்த் ராம், அம்மாவாக கலாவதி. தங்கள் நடிப்பில் மகள் மீதான பாசத்தையும், அவளது காதலை எதிர்ப்பதில் சாதிவெறியையும் குறையின்றி காட்டியிருக்கிறார்கள்.

நாயகியின் உறவினராக வருகிற செந்தில், சாதிவெறியையும் கொலைவெறியையும் சேர்த்து தன் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். சபி, ஜிவி இருவரும் நண்பர்களாக நடிப்பளவில் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் பெட் கட்டி, வகுப்பறையில் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே சரக்கடிப்பதெல்லாம் அநியாய அக்கிரமம். அப்படியான காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் அவசியம் என இயக்குநர் விளக்கினால் நல்லது.

நாயகனின் தாத்தாவாக வருகிற பவுன்ராஜ் தன் பேரனின் சடலத்தின் முன் பாடும் ‘பிச்சைக்காரப் பிழைப்பு’ பாடல் வாழ்க்கை இவ்வளவுதான் என்ற எதார்த்தத்தை உணர்த்திக் கடக்கிறது.

சங்கர் ராமின் இசை, செல்வகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

இதுதான் நடக்கும் என நாம் எதிர்பார்ப்பதெல்லாம் நடக்கிற திரைக்கதையோட்டம் படத்தின் பலவீனம். ஒட்டுமொத்த படமும் நம் நாட்டில் நடந்த, நடக்கிற சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருப்பது, நம் சமூகம் எத்தனை மனிதாபிமானமற்றது என்பதற்கான சான்று.

திவ்யா _ நெஞ்சு பொறுக்குதில்லையே…

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்