நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியபோது ”முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.
என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி” என்றார்.
நடிகர் பரத் பேசியபோது ” ‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.
இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.
என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி” என்றார்.
நடிகர் அஜய் கார்த்திக் பேசியபோது “இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி” என்றார்.


