லவ் சப்ஜெக்டா? எஸ்.
காமெடி படமா? எஸ்.
அப்பா மகன் சென்டிமென்ட் படமா? எஸ்.
சொசைட்டிக்கு ஏதாச்சும் மெசேஜ் சொல்றாங்களா? எஸ்
இப்படி இன்னும் சில கேள்விகள் கேட்கலாம். அத்தனைக்கும் எஸ் என பதில் சொல்லலாம். அப்படியொரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக ஹேப்பி ராஜ்.
எளிய குடும்பத்து வாரிசான ராஜும் கோடீஸ்வர தொழிலதிபரின் மகளான காவ்யாவும் காதலிக்கிறார்கள்.
காவ்யாவின் அப்பாவுக்கு ராஜை பிடித்தாலும், அவனது கிராமத்து அப்பாவின் அழகில்லாத தோற்றமும், அவருடைய பேச்சும் செயலும், அவரது சொந்த பந்தங்களின் நடவடிக்கைகளும் பிடிக்காமல் போக, ராஜ் தன் அந்தஸ்துக்கு ஏற்றவனில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் காவ்யாவின் அப்பாவுக்கும் ராஜின் அப்பாவுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது.
அதையெல்லாம் கடந்து காதலர்கள் மணவாழ்க்கையில் இணைகிறார்கள். எப்படி இணைகிறார்கள் என்பதை பரபரப்பாகவும் அதற்கு முந்தைய காட்சிகளை ரசித்துச் சிரிக்கும்படியும் அமைத்திருக்கிறார் இயக்குநர் மரியா இளஞ்செழியன்.
தன் அப்பாவையும் அம்மாவையும் காதலியின் கண்ணில் காட்டினால் காதலுக்கு ஆப்பு கன்ஃபர்ம் என்ற நிலையில், ஒட்டுமொத்த சொந்த பந்தங்களும் சீர் வரிசையோடு காதலி வீட்டு காஸ்ட்லி விசேசத்தில் வந்து இறங்கும்போது படுகிற பாட்டில் ஐயோ பாவம் என உச் கொட்ட வைக்கிற ஜீ வி பிரகாஷ், அப்பாவின் பாசம் புரிந்து கண்கலங்குகிறபோது நன்றாக நடிக்கிறார் என்ற ஃபீலிங்கை தருகிறார். ஆட்டம் பாட்டம் என தர லோக்கலாக ரவுண்டு கட்டி அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதெல்லாம் அவருக்கு பழகிப்போன விஷயங்கள் என்பதால் ரகளையாக செய்திருக்கிறார்.
லட்சணமாக இருக்கிற நாயகி ஸ்ரீ கெளரிபிரியாவின் கண்கள் காட்சிகளுக்கேற்ப நடிக்கிறது. அளவான சதைப்பிடிப்பும் கவர்கிறது. காதல் தோல்வியால் மன உளைச்சலில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் ஜி வி யிடம் சிகரெட்டைக் காட்டி, காதலைச் சொல்லி அவரது மனசெல்லாம் றெக்கை முளைக்க வைக்கிற தருணம் அத்தனை அழகு.
படத்துக்கு வேணும்னா ஜி வி பிரகாஷ் ஹீரோவா இருக்கலாம்; ஆனா, நான் வர்ற சீன்ல நான்தான் ஹீரோ என்று சொல்லும் விதமாக இருக்கிறது ஜார்ஜ் மரியானின் நடிப்பு. தோற்றத்தில் எளிமையானவராக, சொத்து பத்து விஷயத்தில் பவர்ஃபுல் ஆசாமியாக இதுவரை ஏற்காத மாறுபட்ட கதாபாத்திரம். வெள்ளந்தித்தனம் கலந்த வியக்க வைக்கும் நடிப்பு. மகனுக்காக எதையும் செய்யும் அப்பாவாக நெகிழ வைக்கிறார்.
அப்பாடா, அப்பாஸை பார்த்து எத்தனை வருடங்களாயிற்று. கரன்சிகளில் புரள்கிறவராக, ஏழை எளிய மனிதர்களை முகச்சுளிப்புடன் பார்ப்பவராக கம்பேக்’கில் கச்சிதம். ஸ்டைலிஷ் லுக்கும் அசத்துகிறது.
பட்டிக்காட்டு மனுஷியாக இருந்து ஜீன்ஸ் டீசர்ட்டுக்கு மாறி குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் கீதா கைலாசம் கொஞ்ச நேர கலகலப்புக்கு கேரண்டி தருகிறார்.
அதிர்ச்சி அருணின் மிமிக்ரி எபிசோட் அதிரிபுதிரி அட்டகாசம். மதுரை முத்துவுக்கு ஸ்டேன்டப் காமெடி ஸ்டைலில் அலப்பரை செய்ய வாய்ப்பில்லை என்றாலும் த்ரூஅவுட் பங்களிப்பு துறுதுறுவென்றிருக்கிறது.
பிரார்த்தனா நாதன் ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிறார்; சூரிய வம்சம் பிரியா ராமனை நினைவு படுத்தி போகிறார்.
ஒரு பக்கம் ஸ்டார் ஹோட்டல் கலாச்சாரத்தில் மிதந்தபடி பளீர் நிறத்தில் வலம் வருபவர்களின் உலகம்; இன்னொரு பக்கம் ஆடு மாடுகளோடு வாழ்ந்து, மலைப்பகுதிகளில் சுற்றித் திரிந்து, பிரமாண்டமாய் வழிந்தோடும் ஆற்று நீரில் குளித்து மாநிறம் சுமந்திருக்கிற மக்களின் வாழ்வியல் பின்னணி… இரண்டையும் அதனதன் தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறது மதன் கிறிஸ்டோபரின் கேமரா.
பின்னணி இசையில் காட்சிகளின் உயிரோட்டத்துக்கு உரம் போட்டிருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் ‘ஆடினே இருப்பேன்’ பாடலுக்கு தந்திருக்கும் இசை ஆட்டம் போடத் துண்டும். மற்ற பாடல்களும் பரவசம் பரப்புகின்றன.
எடிட்டருக்கு வெட்டுகிற உரிமை மறுக்கப்பட்டதோ என்னவோ தெரியவில்லை; படத்தின் நீளம் 156 நிமிடங்கள்; சில காட்சிகள் கொட்டாவிக்கு கேட் திறக்கின்றன.
உருவ கேலி செய்வது தவறு; தோற்றத்தைப் பார்த்து யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றெல்லாம் அறிவுரைகளை அள்ளித் தெளித்திருக்கும் இந்த படத்தின் கமர்சியல் அம்சங்கள் பொழுதுபோக்கிற்கு போதுமானதாக இருக்கிறது.
ஹேப்பி ராஜ் – காதலும் கலகலப்பும்!
-சு.கணேஷ்குமார்


