ஃபேஸ்புக் புழக்கத்துக்கு வராத ஆர்குட் காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை.
நாம காதலிக்கிறோம்தான். அதுக்காக நீ எந்த நேரமும் என்கூடவே சுத்திக்கிட்டிருந்தா எப்படி? ஏதாச்சும் வேலைக்கு போ, இல்லை வேற ஏதாச்சும் பண்ணு. நீ யாரு, உன் அடையாளம் என்னன்னு ஊர் உலகத்துக்கு காட்டு.
இப்படி ஒரு காதலி தன் ’29’ வயது நிரம்பிய காதலனிடம் சொல்கிறாள்.
அவன் அதை காதில் போட்டுக் கொள்வதாயில்லை. அவளையே சுற்றிச் சுற்றி வருகிறான்.
எரிச்சலடையும் அவள், அவனை திருத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறாள். காதலை பிரேக் அப் செய்து, தனது லட்சியமான ஐ ஏ எஸ் தேர்வு எழுதுவதில் கவனம் செலுத்துகிறாள்.
காதலை முறித்துக் கொண்ட மனநிலையில் இருக்கும் அவளால் அந்த தேர்வை எழுதி தேர்ச்சியடைய முடிந்ததா? அவளிடமிருந்து பிரிந்த காதலன் தான் யார் என புரிந்து கொண்டானா? வாழ்க்கையில் எதையாவது சாதித்தானா?
இந்த கேள்விகளுக்கு பதில்களாய் அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ‘மேயாத மான்’ ரத்ன குமார்.
காதலியோடு பொழுதைக் கழித்து உற்சாகமாவது, ஒவ்வொரு சந்திப்பிலும் அவளுக்கு பரிசு கொடுத்து நெகிழ வைப்பது, அவளது வெறுப்பைச் சம்பாதித்து மன உளைச்சலுக்கு ஆளாவது, மக்கள் நலப் பணியாளனாகி ஊருக்கு நல்லது செய்வது, அதனால் உருவாகும் எதிர்ப்பை எதிர்கொள்வது என குறை சொல்ல முடியாத அளவுக்கு களமாடியிருக்கிறார் கதாநாயகனாக வருகிற விது.
தன்னை விட ஒரு அடிக்கும் அதிக உயரத்தில் இருக்கிற காதலன் காட்டுகிற அதிகப்படியான பிரியத்தில் சலிப்பும் வெறுப்பும் அடைகிற காதலியாக பிரீத்தி அஸ்ராணி. பிரேக் அப் முடிவெடுப்பது நியாயமாக இருந்தாலும் அந்த முடிவால் தன் லட்சியப் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கிறபோது வெளிப்படுத்தும் முகபாவங்கள் பொருத்தமாக இருக்கிறது. வெறித்தனமாக போடும் அந்த ஆட்டமும் அசத்துகிறது.
விதுவின் நண்பனாக வரும் அவினாஷ் குடி போதையில் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது.
தான் வசிக்கும் கிராமத்தில் மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து செய்தல், குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மகனுடன் வருடக்கணக்கில் பேசாமலே இருப்பது, மகன் உயிருக்கு ஆபத்து என தெரியவரும்போது கதறித் துடிப்பது என கவனம் ஈர்க்கிறார் நாயகனின் அம்மாவாக வருகிற ஆதிரா.
தனக்கு எதிரியாகிவிட்ட ஹீரோவை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் வில்லத்தனத்தில் போதுமான அளவில் கெத்து காட்டுகிறார். இன்னபிற கேரக்டர்களில் வருகிறவரின் பங்களிப்பும் சரியான விகிதத்தில் இருக்கிறது.
‘அவ உதடு திருப்பிப் போட்ட திருக்குறள் மாதிரி, கீழ்வரி பெருசாவும் மேல் வரி சிறுசாவும் இருக்கும்’, ‘ரோட்ல சிலை வைக்கிற அளவுக்கு வளரலைன்னாலும் வீட்ல உலை வைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கோம்ல…’ வசனங்கள் இப்படி ஆங்காங்கே அட போட வைக்கின்றன.
ஷான் ரோல்டன் இசை என்றாலே படத்தில் ஏழெட்டு பாட்டு கன்பார்ம். அதில் ஐந்தாறு பாடல்களை அவரே பாடுவது வழக்கம். அதே வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது. ‘சீலே சீலே’ பாடல் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்கிறது.
தரமாக இருக்கிறது மாதேஸ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு. இயக்குநர் எடிட்டரை வேலை செய்யக்கூடாது என கட்டளையிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது; படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.
காட்சிகள் கிரிஞ்ச் குடோனுக்குள் தள்ளிவிட்ட ஃபீலிங் தருவது உறுதி. அதை பொறுத்துக் கொள்ள முடிந்தால், ‘காதலிப்பவர்கள் காதலில் மட்டும் மூழ்கி விடாமல் லட்சியம் கனவு என எதையாவது இலக்காக வைத்துக் கொண்டு முன்னேறுவது முக்கியம்’ என படம் மூலம் சொல்ல வந்த கருத்து சரியானதாக, அவசியமானதாக இருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம்.
-சு.கணேஷ்குமார்
