சிலபஸில் உள்ள பாடங்களை நடத்துவதோடு மாணவ, மாணவிகளிடமுள்ள கெட்ட விஷயங்களைக் களையெடுத்து, அவர்களுக்கு நல்வழி காட்டுவது ஆசிரியர்களின் கடமை. அந்த கடமையிலிருந்து ஆசிரியர் ஒருவர் தவற, மாணவன் ஒருவன் அவருக்கு நல்வழி காட்டுகிற கதை.
ஈகோ, பொறாமை போன்றவை மனிதனை ஆக்கிரமிப்பது என்பது உடம்பில் கொடிய நோய் பரவிப் பாய்வதைவிட ஆபத்தானது. அந்த ஆபத்தான ஈகோ தொற்றிக் கொண்ட ராமன் இந்த கதையின் நாயகன். அவரால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் சிக்கல், அவரால் அவருக்கே ஏற்படும் பிரச்சனை என விரிகிறது இந்த படத்தின் திரைக்கதை…
கிராமம் ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரியும் ராமனுக்கு தன்னைவிட யாரும் உயர்வானவராக இருந்து விடக்கூடாது. தன்னை மிஞ்சும் விதமாக யார் எது செய்தாலும் பிடிக்காது. அப்படியிருக்க அவரிடம் படித்து ஆளான மாணவன் ஒருவன் அவர் வாங்கியதைப் போலவே ஒரு பைக் வாங்குகிறான். தன் மாணவன், சாதியிலும் தாழ்ந்தவன். அவன் அவருக்கு சமமாக பைக் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தால் அவரது ஈகோ சும்மாயிருக்குமா?
அப்படியென்றால் அந்த பைக்கால் அவர்களுக்குள் சண்டை சச்சரவு உருவாகிறதா? என்றால், ஆமாம். அந்த பைக்காலும் உருவாகிறது. கூடவே ஒரு நாயாலும், ராமனின் மகளுடைய காதலாலும் பிரச்சனை உருவாகிறது.
பைக் மூலம் பிரச்சனை வருகிறது; அது ஓகே. நாய்க்கு என்ன சம்பந்தம்? பிரச்சனைக்கு காதல் எப்படி காரணமாகிறது?
இந்த கேள்விகளுக்கான பதில்களை கிரைம் திரில்லருக்கான பரபரப்போடு காட்சிகளாக தொகுத்திருக்கிறார் இயக்குநர் கணேசன் நாச்சி முத்து.
ராமனான ரோபோ சங்கர். பேச்சைக் குறைத்துக் கொண்டு விரைப்பும் முறைப்புமாக திரிகிற வேலை. அதை போதுமான வில்லத்தனத்துடன் செய்திருக்கிறார். சாதிப்பாகுபாடு பார்ப்பவராகவும் கூடுதல் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப, தன் மகளின் காதலுக்கு எதிரியாகி சற்றே கொடூர முகம் காட்டுகிறார். ரோபோ சங்கர் இருப்பதால் இது காமெடி படம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர் செயல்பாடுகளில் சில கோமாளித்தனமாக இருக்கும்; அது லேசாக சிரிப்பூட்டலாம். அவ்வளவே.
ரோபோ சங்கரிடம் படித்து முன்னேறி அரசுப் பணியில் இணைந்து, அவருக்கே உயரதிகாரியாக வருகிற கேரக்டரில் சிபி புவன சந்திரன். வறுமைச் சூழலில் வசித்துக் கொண்டு, தான் அரசுப் பணியில் சேரவேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் தன்னை எதிரியாக பார்க்கும் சூழ்நிலையில் பதிலுக்கு கொதித்துக் கொந்தளிக்காமல் பணிந்துபோக வேண்டும். இடையிடையே காதலிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். கடமைகள் அதிகம்தான். அதை அலட்டலில்லாத நடிப்பால் கச்சிதமாக செய்து முடிக்கிறார். தமிழ் சினிமா ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அவர், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் எதிர்காலம் கண்டிப்பாய் பிரகாசமாக இருக்கும்.
சிபிக்கு ஜோடியாக கீர்த்தனா. புன்னகை சிந்தியபடி வருகிறார், சிபிக்கு அவசரமாக பணம் தேவைப்படும்போது நகையைக் கழற்றிக் கொடுக்கிறார். அதை தவிர அவரது நடிப்புப் பங்களிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. அவரது ஒல்லிப்பிச்சான் தேகத்தையும் வற்றிப் போன முகத்தையும் பார்த்தால் ‘ஏதாச்சும் நல்லதா நாலு வாய் சாப்பிட்டு உடம்பை தேத்தும்மா’ என்று சொல்லத் தோன்றுகிறது.
தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து மகனுக்கு பைக் வாங்கிக் கொடுக்கிற, மகனை அரசுப் பணியாளனாக பார்க்கும் நாளுக்கு காத்துக் கிடக்கிறவராக கவிதா ரமேஷ். கையெடுத்துக் கும்பிடும்படியான கதாபாத்திரம். அதற்கு பொருத்தமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். சேரன் ராஜ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா உள்ளிட்டோர் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
ரெய்மன் ராட்ரிக்ஸ் அமைத்திருக்கும் இசை பாடல்களின் வரிகள் செவிகளை எட்டாமல் தடுக்கிறது. பின்னணி இசையில் குறையில்லை. ஜினோ பாபுவின் ஒளிப்பதிவில் கோவை மாவட்ட கிராமங்களின் அழகை, பசுமையை கழுகுப் பார்வையில் சுற்றிப் பார்க்க முடிகிறது.
கருத்தாழமிக்க கதையை கையிலெடுத்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் பரபரப்பு கூட்டியிருக்கலாம்.
‘ஈகோ என்பது கொடிய விஷம்; அது கொலை செய்யக்கூட தூண்டும்’ என்ற விஷயத்தை ஆழமாக, அழுத்தமாக பதிவு செய்திருப்பதால், குறைகளைப் பொருட்படுத்தாமல் படத்துக்கு அதிக மதிப்பெண் தருவது கடமையாகிறது.
ஈகோ ராமன் – நல்லாசான்!
-சு.கணேஷ்குமார்
