பயந்த சுபாவமுள்ள ஒரு பெண்ணுக்கு வளர்ப்புத் தந்தையாக இருந்து அவளை வீரமிக்க பெண்மணியாக உருவாக்க வேண்டிய கடமை.
காட்டுக்கு காவலனாக இருந்து பலரை அழித்தொழிக்கும் பொறுப்பு.
காவல்துறை அதிகாரியாக இருந்து, அதிரடி சம்பவம் செய்து சிறைத் தண்டனை அனுபவிப்பது.
சிறையிலிருக்கும்போதும் அதிரடி சம்பவங்களைத் தொடர்வது.
ஒன் லாஸ்ட் டான்ஸ் என்ற பெயரில் இரண்டு பாடல்களுக்கு அசத்தலாக ஆடுவது.
நாட்டையே அழிக்குமளவு எல்லா விதமான பலமும் கொண்ட பயங்கரவாதியை ஒழித்துக்கட்ட பல விதமான முயற்சிகளில் இறங்குவது.
அந்த பயங்கரவாதிக்கு துணையாக இருக்கிற லோக்கல் அரசியல்வாதியை சுளுக்கெடுப்பது.
பெண் பிள்ளைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுப்பது.
கள்ளச்சாராய மரணங்களின் பின்னணியில் நடக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பது.
போகிற போக்கில் அரசியல் கட்சிகளை இழுத்துப்போட்டு வெளுத்து வாங்குவது.
நான் ஆணையிட்டால் என எம் ஜி ஆர் ஸ்டைலில் சாட்டை சுழற்றுவது.
கடைசிப் படம் என்பதாலோ என்னவோ தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட வேலைகள். அதையெல்லாம் ஏன் செய்கிறார், எதற்காக செய்கிறார் என்பது திரைக்கதை.
செய்கிற ஒவ்வொரு விஷயத்திலும் ரசிகர்களை உற்சாகமாக்கும் ஹீரோயிஸம் இருக்கிறது. டைட்டிலில் விஜய் பெயருக்கு முன் முதலமைச்சர் என்றிருக்கிறது. அப்புறமென்ன தியேட்டரில் ஆரவாரத்துக்கு பஞ்சமில்லை.
தளபதி விஜய் வழக்கம்போல பரவசமூட்டும்படி ஆடுகிறார். அனல் அரசு ஆக்சன் காட்சிகளை வன்முறை வெறியாட்டமாக அமைந்திருக்க அதற்கேற்றபடி சூறாவளியாய் சீறுகிறார். சென்டிமென்ட் சீன்களில் போதுமான அளவில் முகபாவம் காட்டுகிறார்.
வளர்ப்பு மகளாக மமிதா பைஜு தனக்கு கியூட்டாக நடிக்கவும் தெரியும்; கதையின் ஆழத்தைப் புரிந்து நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒரு நாட்டையும் நாட்டின் அதிபரையும் அழிக்க முடிகிற அளவுக்கு பலம் வாய்ந்த சக்தியாக பாபி தியோலின் வில்லத்தனம் மிரட்டுகிறது. அவருக்கு துணையாக நிற்கிற அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் வழக்கம்போல் கம்பீரம்.
பூஜா ஹெக்டே விஜய்யின் அட்டாக் ஆபரேசன்களில் ஆதரவாக இருந்தபடி, ஒரு பாடலில் கவரும்படி ஆடுகிறார்.
டி ஜே, சுனில், பிரியாமணி, ரேவதி, நரேன், ஜி எம் சுந்தர், ரேச்சல் ரெபேக்கா, ஷரத் ரவி, அர்ஷத் என ஏகப்பட்ட நடிகர் நடிகைள். எல்லோருக்கும் முக்கியத்துவமிருக்கிறது.
அனிருத் இசையில் ‘தளப…தீ கச்சேரி’, ‘ராவண மவன்டா’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வைப் மெட்டீரியல். ‘செல்ல மகளே’ பாடல் இதம். பின்னணி இசை காட்சிகளுக்கு எனர்ஜி பூஸ்டர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு தரம்.
தெலுங்கு பகவந்த் கேசரியின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு, லாஜிக் இல்லா மேஜிக் சமாச்சாரங்களை அன்லிமிட்டடாக கொட்டிக் குவித்து, விஜய் ரசிகர்கள் திருப்தியானால் போதும் என்ற நோக்கத்திலும் ‘த வெ க’வின் பிரச்சாரத்துக்காகவும் ஜனநாயகனை கட்டமைத்திருக்கிறார் ஹெச் வினோத்.
ஜனநாயகன் – விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்; காமன் ஆடியன்ஸுக்கு ஏமாற்றம்!
-சு.கணேஷ்குமார்

