‘ஆலி’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் புதிய சிந்தனை, புதிய பார்வை மற்றும் புதுவிதமான கதைக் களங்களுடன் இளைஞர்கள் சாதித்து வரும் வரிசையில் இத்திரைப்படமும் இணைந்துள்ளது.

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு இளம் ஜோடியின் கதை இது. பெண்கள், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக இப்படம் விவரிக்கிறது. மதம் மற்றும் ஜாதியைக் கடந்து நடைபெறும் கதாநாயகியின் திருமணமும், அதனையொட்டிய விறுவிறுப்பான சூழலுமே படத்தின் திரைக்கதை.

டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் என்ற பெண்மணி இப்படத்தை எழுதி, இயக்கி, பாடல்களையும் எழுதியுள்ளார். பிரவின் என்பவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் முக்கியப் பாத்திரத்தை ஏற்றுள்ளார். கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜிக் குமார், செராய் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோமி, மன்சாட், ஜிலா, சுரேஷ் திருவல்லா ஆகியோரும் படத்தில் பங்களித்துள்ளனர்.
சினோஜ் பி.ஆர். ஒளிப்பதிவையும், அபூ ஜியாத் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். ராம் கோபாலகிருஷ்ணன், ரத்தீஷ் ராய் உள்ளிட்ட குழுவினர் இசையமைக்க, அரபிப் பாடகர் ஹஸன் மற்றும் ஹிந்திப் பாடகர் சல்மான் ஆகியோர் பாடியுள்ளனர். முன்ஹர் சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

