அறிவியலுக்குப் பிடிபடாத மர்மம், அதிரவைக்கும் அமானுஷ்யம், திகில் கிளப்பும் திருப்பங்கள் என பழக்கப்பட்ட ஃபார்முலாவில் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்ட முயற்சித்திருக்கும் போட்டோகிராபர்.
இளைஞன் வீரா போட்டோகிராபியில் ஆர்வமாக இருக்கிறான், உள்ளே போனால் உயிரோடு திரும்ப வாய்ப்பில்லாத காட்டுக்குள் சில அரிய விஷயங்களை படமெடுப்பதற்காக போகிறான். அங்கு அவனைச் சுற்றி மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. போன பாதை எது, திரும்பும் வழி எது என எதுவும் புரிபடாமல் போகிறது. தாகம் தீர்க்கத் தண்ணீர், பசிக்கு உணவு என எதுவும் கிடைக்காமல் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறான். அவனால் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடிந்தாதா இல்லையா என்பது கதையின் மீதி… காட்டில் நடக்கும்
பைலட்டாக விமானம் ஏறி வானத்தில் சுற்றிக் கொண்டிருந்த அஷ்ரப், இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாகி வனத்தில் வலம் வருகிறார். காட்டின் சூழல் தருகிற பயம், நடக்கும் சம்பவங்கள் தருகிற பீதி, அம்மா மீது பாசம் என பலவகை உணர்வுகளை பரவாயில்லை ரகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹீரோவுக்கு ஜோடியாக சில காட்சிகளில் வந்து போகிறார் ஜனனி சமாதானம். அப்பாவாக ஆடுகளம் நரேன், நண்பனாக கருணாகரன், இன்னபிற கேரக்டர்களில் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள். நடிப்பால் உருக வைக்கிறார் அம்மாவாக வருகிற தேவி மகேஷ்.
மிஸ்ட்ரி திரில்லர் பாணியிலான கதைக்களத்துக்கு பொருத்தமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
படத்தின் முன் பாதி பொறுமையைச் சோதிக்க, காட்டுக்குள் போனவர்கள் மாயமாகிப் போவதன் காரணம், பலரையும் காவு வாங்கிய காடு ஹீரோவை மட்டும் விட்டு வைப்பதன் பின்னணி என மறு பாதி திரைக்கதையில் ஓரளவு சுறுசுறுப்பு பற்றிக் கொள்கிறது.
வித்தியாசமான முயற்சிகள் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்வதில்லை. மனம்போன போக்கிலான திரைக்கதையால் அந்த வரிசையில் இணைகிறது இந்த படம்.


