இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர், இயக்குநர் இளன் பேசியதாவது..,
இப்படம் எனக்கும் மிகவும் முக்கியமான படம் இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படியான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். திரை ஆளுமைகள் ராதிகா மேம், செந்தில் சார் எல்லோரும் என்னை நம்பி இப்படத்தில் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.

முக்கியமாக யுவன் சார் அற்புதமான இசையை தந்துள்ளார். அவர் இசை படத்திற்கு பெரும் பலம். “‘அட்ராசிட்டி’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்கிய விதமும், அதன் பின்னால் இருக்கும் யோசனையும் மிகவும் வித்தியாசமானது. இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘அட்ராசிட்டி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடல் மற்றும் படத்தைப் பற்றி அதிகமாக சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அவர்கள் படத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும், சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
இந்தப் படத்தின் உருவாக்கப் பயணம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகை சான்வி மேக்னா பேசியதாவது..,
“உண்மையாகச் சொன்னால், ஆரம்பத்திலிருந்தே நான் இளன் அடிக்கடி ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஒரே நேரத்தில் எப்படி ஒரு படத்தை இயக்கவும், அதில் நடிக்கவும் முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், எனக்கு அந்த அனுபவம் கிடையாது.
அதற்கு அவர், ‘நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப முழுமையாக அதற்குள் சென்று நடிப்பேன். அதே நேரத்தில் இயக்குநராக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக வைத்திருப்பேன்’ என்று சொல்வார்.
ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான உணர்வுப்பூர்வமான காட்சி இருந்தது. அந்தக் காட்சிக்கு முன்பு அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். நான் அவரிடம், ‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நடிகராக என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அடுத்ததாக என்ன காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார்.
அதன் பிறகு அவர் ஒருபோதும் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஆனால், படம் முழுவதும் அவருடைய செயல்பாட்டைக் கவனித்தபோது, இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கும், நடிகர் நிலையிலிருந்து மீண்டும் இயக்குநர் நிலைக்கும் அவரால் மிக எளிதாக மாற முடிந்ததைப் பார்த்தேன்.
அவருக்கு அந்த அளவுக்கு சிறந்த புரிதலும், Presence of Mind-ம் இருக்கிறது. இந்தப் பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. மேலும், இந்தப் படத்தில் நான் முழுமையாக தமிழில்தான் டப்பிங் பேசியிருக்கிறேன். இந்தப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். கண்டிப்பாக எங்களைப்போல ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள் நன்றி.
நடிகர் யோகிபாபு பேசியதாவது:
“ இளன், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘ஸ்டார்’ படத்தில் இருந்தே நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம், ‘சார், நாம கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம்’ என்று இளன் என்னிடம் கூறியிருந்தார். அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றி, இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி.
அடுத்து நாங்கள் இணைந்து செய்யப்போகும் இன்னொரு படம் இருக்கிறது. அதில் நீங்கள் கேட்கும் வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் அந்தக் கான்செப்ட் மிகவும் நன்றாக வந்துள்ளது. அதற்காகவும் நன்றி. மிக்க நன்றி. அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது..,
“‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.
இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
இந்தப் படம் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.”

